3991. | வாலினால் உரம் வரிந்தனர், நெரிந்து உக வலிப்பர்; காலினால் நெடுங் கால் பிணித்து உடற்றுவர்; கழல்வர்; வேலினால் அற எறிந்தென, விறல் வலி உகிரால், தோலினால், உடன் நெடு வரை முழை எனத் தொளைப்பர். |
வாலினால் உரம் வரிந்தனர் - ஒருவரையொருவர் தம் வாலினால் மார்பினை இறுகப் பிணித்தவராய்; நெரிந்து உக வலிப்பர்- (எலும்புகள்) நொறுங்கிப் பொடியாகும்படி இழுப்பர; காலினால் நெடுங்கால் பிணித்து - தம் கால்களால் மற்றவர் நீண்ட கால்களை மாட்டி; உடற்றுவர் - இழுத்து வருத்துவர்; கழல்வர் - பின் அப்பிடிப்பினின்று கழன்று வெளிப்படுவர்; வேலினால் அற எறிந்தென - வேற்படையினால் உடலைத் தைக்குமாறு வீசி எறிந்தது போல; விறல் வலி உகிரால் - மிக்க வலிமை உடைய நகங்களால்; தோலினால் உடல் - தோலால் மூடப்பட்ட உடம்பினை; நெடுவரை முழை என - பெரிய மலையிலுள்ள குகை என்னும்படி; தொளைப்பர் - அழமாகத் துளைப்பார்கள். எறிந்தென - எறிந்தது + என; இது தொகுத்தல் விகாரம் உகிருக்கு வேல் உவமை. 57 |