3994. | அன்ன தன்மையர், ஆற்றலின் அமர் புரி பொழுதின், வல் நெடுந் தடந் திரள் புயத்து அடு திறல் வாலி, சொன்ன தம்பியை, தும்பியை அரி தொலைத்தென்ன, தொல் நகங்களின், கரங்களின், குலைந்து, உக மலைந்தான். |
அன்ன தன்மையர் - அத்தகைய தன்மையையுடையவர்களான வாலி சுக்கிரீவர்; ஆற்றலின் அமர்புரி பொழுதில் - வலிமையோடு போர் செய்து கொண்டிருக்கையில்; வல்நெடுந் தடந்திரள் புயத்து - வலிய, நீண்ட, பெரிய திரண்ட தோள்களையும்; அடு திறல் வாலி - பகைவரை வெல்லும் வலிமையினையும் உடைய வாலி; சொன்ன தம்பியை - மேலே குறிப்பிட்ட தம்பியான சுக்கிரீவனை; தும்பியை அரி தொலைத்தென்ன - யானையைச் சிங்கம் அழிப்பது போன்று; கொல் நகங்களின் - கொல்லவல்ல நகங்களாலும்; கரங்களின் - கைகளாலும்; குலைந்து உக மலைந்தான் - வலிமை தளர்ந்து விழும்படி செய்தான். தும்பி - யானை - வாலிக்குச் சிங்கமும் சுக்கிரீவனுக்கு யானையும் உவமைகள். இதனால் வாலியின் ஆற்றல் மிகுதி கூறப்பெற்றது. அரி என்பது சங்கரிக்கும் அதாவது அழிக்கும் வலிமையுடையது என்னும் பொருளில் சிங்கத்தைக் குறித்தது. தொலைத்தென்ன - இது தொகுத்தல் விகாரம். நகங்களின், கரங்களின் என்புழி இன் ஏதுப் பொருளல்வந்தது. 60 |