3996. | தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தன போல வயங்கு சென்னியன், வயப் புலி வான வல் ஏற்றொடு உயங்கும் ஆர்ப்பினன், ஒல்லை வந்து, அடு திறல் வாலி பயம் கொளப் புடைத்து, எற்றினன்; குத்தினன் பல கால். |
தயங்கு தாரகை - விளங்குகின்ற விண்மீன்கள்; நிரை தொடுத்து- வரிசையாகத் (மாலையாகத்) தொடுக்கப்பெற்று; அணிந்தன போல - அணியப்பெற்றன போல; வயங்கு சென்னியன் - (கொடிப்பூ) விளங்குகின்ற தலையினை உடையவனாகிய சுக்கிரீவன்; வயப்புலி - வலிமை பொருந்திய புலியும்; வான வல ஏற்றொடு - மேகத்திலுள்ள வலிய இடியேறும்; உயங்கும் ஆர்ப்பினன் - (கேட்டு) வருந்தும்படியான ஆரவாரத்தைச் செய்து கொண்டு; ஒல்லை வந்து - விரைந்து வந்து; அடுதிறல் வாலி - பகைவரை அழிக்கும் வலிமையுடைய வாலியும்; பயம் கொளப் புடைத்து - அச்சம் கொள்ளுமாறு அடித்து; ஏற்றினன் - மோதி; பல்கால் குத்தினன் - பலமுறை குத்தினான். அடையாளமாகச் சுக்கிரீவன் தலையில் சூட்டப் பெற்றுள்ள கொடிப்பூக்கள், வானத்து விண்மீன்களை ஒரு மாலையாகத் தொடுத்து அணிந்தாற் போல் விளங்கின. உவமை அணி. இராமனது வார்த்தைகளால் ஊக்கம் பெற்றவனாய்ச் சுக்கிரீவன் வாலியும் அஞ்சுமாறு புடைத்து, எற்றிக் குத்தினான். இவ்வளவு விரைவாகச் சுக்கிரீவன் வந்து தாக்குவான் என எதிர்பாராமையால் வாலி அஞ்சினான் என்றார். 62 |