4002.சையம் வேரொடும் உரும்
      உறச் சாய்ந்தென, சாய்ந்து,
வையம் மீதிடைக் கிடந்த போர்
      அடு திறல் வாலி,
வெய்யவன் தரு மதலையை
      மிடல் கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன்,
      கடுங் கணை கவர்தல்.

     உரும் உற - பேரிடி விழுதலால்; சையம் வேரொடும் சாய்ந்தென -
மலை அடியோடு நிலைபெயர்ந்து விழுந்தாற்போல; சாய்ந்து - விழுந்து;
வையம் மீதிடைக் கிடந்த -
நிலத்தின் மேல் கிடந்த; போர் அடு திறல்
வாலி
- போரில் பகைவரை அழிக்கும் வலிமை உடைய வாலி; வெய்யவன்
தரு மதமலையை -
சூரியன் பெற்ற மைந்தனான சுக்கிரீவனை; மிடல் கொடு
கவரும் -
வலிமையுடன் இறுகப்பற்றிய; கை நெகிழ்ந்தனன் - கைகளின் பிடி
நெகிழ்ந்து விட்டான்; கடுங்கணை கவர்தல் - (ஆனால் மார்பில் தைத்த)
கொடுமை மிக்க அம்பினைப் பற்றுவதில்; நெகிழ்ந்திலன் - கை
நெகிழாதவனாயினான்.

     இராமன் தொடுத்த அம்பால் தளர்வுற்ற வாலி தன் கைகளைச்
சுக்கிரீவனை இறுகப்பற்றிய பிடிப்பினின்று நெகிழ விட்ட நிலையிலும், தன்
மார்பில் தைத்து ஊடுருவிய அம்பைப் புறத்தே போக விடாது வலிந்து பற்றிக்
கொள்ளம் உறுதியும் வீரமும் படைத்தவனாய் விளங்கினான்.

     இராமன் அம்பிற்கு இடியும், தரையில் விழுந்த வாலிக்கு அடியோடு
நிலை பெயர்ந்து வீழ்ந்த மலையும் உவமைகள்.  கை நெகிழ்ந்தனன்;
நெகிழ்ந்திலன் கடுங்கணை கவர்தல் - முரண்தொடை.                 68