4005.'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத்
      தேவர், இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல்
      உண்டோ?' எனும்; 'அயலோர்
யாவரோ?' என நகைசெயும்;
      'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான், செயல்
      ஆம்' என மொழியும்.

     தேவரோ - (இந்த அம்பினை எம்மேல் எய்துவர்) தேவர்களோ? என
அயிர்க்கும் -
என்று ஐயப்படுவான்; அத்தேவர் - 'அந்தத் தேவர்கள்;
இச்செயலுக்கு ஆவரோ -
இத்தகைய செயல் செய்வார்களோ?  அவர்க்கு
ஆற்றல் உண்டோ -
(அன்றியும்) அத்தேவர்களுக்கு என்னை எதிர்க்கும்
வலிமை உண்டோ? எனும் - என்று கூறுவான்; அயலோர் யாவரோ - '(இது
செய்தவர்) அயலார் வேறு யாவரோ?' என நகை செயும் - எனக்கூறி
இகழ்ந்து சிரிப்பான்; ஒருவனே - தான் ஒருவனாக நின்று; இறைவர்
மூவரொடும் ஒப்பான் -
கடவுளர் மூவர்க்கும் ஒப்பாகின்றவனது; செயல்
ஆம் என மொழியும் -
செய்கையாகும் என்று கூறுவான்.

     தேவர்க்கும் வாலிக்கும் பகையின்மையாலும், பாற்கடலைக் கடைந்து
அமுதம் கொடுத்திருப்பதால் தன்னால் நன்மை பெற்றவர்களாதலாலும், இருவர்
போரிடுகையில் இடையில் ஒருவர்மேல் அம்பு தொடுக்கும் அறமல்லாத
செயலைத் தேவர்கள் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் வாலி
'தேவரோ என அயிர்க்கும்' என்றார்.  ஒருவேளை நன்றி மறந்து போரிட
எண்ணினர் என்றாலும் வாலியை எதிர்க்கும் வலிமை அவர்களிடத்து
இல்லையாதலின் 'அத்தேவர் இச்செயலுக்கு ஆவரோ? என வாலி
நினைத்தான்.  தேவர் அல்லாத பிறர் இக்காரியத்தைச் செய்திருப்பரோ
என்பதால் 'அயலோர் யாவரோ' என்றான்.  எவர் செயினும் இச்செயல்
இகழ்ச்சிக்குரிய செயலாதலின் அதை எண்ணி வாலி சிரித்தான்.

     திரிமூர்த்திகள் தனித்தனியே வந்தால் வாலியை வெல்ல இயலாது.
திரிமூர்த்திகளும் ஒன்றாய் அமைந்த ஒப்பற்ற பரம்பொருளே இது
செய்யவல்லவன் என்பதால் 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான்
செயலாம்' என்றான்.  எனும், செயும் என்பன இடைக்குறைகள்.          71