அம்பில் இராம நாமம் காணல் 4012. | பறித்த வாளியைப் பரு வலித் தடக் கையால் பற்றி, 'இறுப்பென்' என்று கொண்டு எழுந்தனன், மேருவை இறுப்போன்; 'முறப்பென் என்னினும், முறிவது அன்று ஆம்' என மொழியா, பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன், புகழோன். |
மேருவை இறுப்போன் - மேரு மலையை முறிக்க வல்லவனும்; புகழோன் - புகழ் மிக்கவனும் ஆகிய வாலி; பறித்த வாளியை - (தன் மார்பினின்று) பிடுங்கிய அம்பை; பரு வலித் தடக்கையால் பற்றி- தனது பருத்த வலிமை வாய்ந்த பெரிய கைகளால் பிடித்து; இறுப்பென் - 'ஒடிப்பேன்'; என்று கொண்டு - என்று கருதி; எழுந்தனன் - எழுந்து; முறிப்பென் என்னினும் - 'இதனையான் முறிப்பேன் என்று முயன்றாலும்; முறிவது அன்றுஆம் - (இது) முறியக்கூடிய எளியமையுடையது அன்றாம்'; என மொழியா - என்று சொல்லி; பொறித்த நாமத்தை - அந்த அம்பில் அடையாளமாக எழுதப்பட்டுள்ள பெயரை; அறிகுவான் நோக்கினன் - அறியும் பொருட்டுக் கூர்ந்து பார்த்தான். 'மேருவை இறுப்போன்' என்றது வாலியின் வலிமையைக் காட்டியது. புகழோன் - வீரத்தால் புகழ் வாய்ந்தவன். இராம நாமத்தை நோக்கும் பேறு பெற்றவன். இராமனால் உயிர் இழக்கும் பேறு பெற்றவன் என்ற காரணங்களால் 'புகழோன்' எனக் குறிக்கப் பெற்றான் எனினும் பொருந்தும். அறிகுவான் - வானீற்று வினையெச்சம். 78 அறுசீர் ஆசிரிய விருத்தம் |