4017. கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:

     நீலக் கார் முகில் - நீலநிறமுள்ள கார்கால மேகம்;கமலம் பூத்து -
தன்னிடம் பல தாமரை மலர்கள் மலரப்பெற்று; வரிவில் ஏந்தி - கட்டமைந்த
வில்லை ஏந்தி; மண் உற்று வருவதே போலும் - நிலவுலகைப் பொருந்தி
வருவது போலுள்ள; மாலை - திருமாலாகிய இராமனை; வாலி
கண்ணுற்றான்-
வாலி தன் கண்களால் கண்டான்.புண் உற்றது அனைய
சோரி -
புண்ணிலிருந்து வெளிப்படுவது போன்ற குருதி; பொறியொடும்
பொடிப்ப -
நெருப்புப் பொறிகளொடு (தன்கண்களினின்று) வெளிப்பட;
நோக்கி - (சினத்தோடு) பார்த்து; எண்ணுற்றாய் - 'எண்ணங்களில் நிறைந்து
பொருந்தியவனே!' என் செய்தாய் - என்ன காரியம் செய்தாய்? என்று
ஏசுவான் -
என்று கூறிப் பழிப்பவனாய்; இயம்பலுற்றான் - சொல்லத்
தொடங்கினான்.

     இராமனது மேனி நிறத்திற்குக் கார்மேகமும், அவனுடைய முகம், கண்,
கை, கால் முதலிய உறுப்புக்களுக்குச் செந்தாமரை மலர்களும் உவமை. ''நீலக்
கார் முகில் கமலம் பூத்து, வரிவில் ஏந்தி, மண்ணுற்ற வருவதே போலும் மாலை''
என்றது  இல்பொருள் உவமை அணியாம்.  'கருமுகில் தாமரைக் காடு பூத்து'
(191); 'கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய' (சிலப் - 17 - 36).
'என்ன நினைந்து என்ன காரியம் செய்தாய்' எனவும் பொருள் கொள்ளலாம்.
'என் செய்தாய்' என்பது மதிக்கத்தக்க நீ என்ன காரியம் செய்துவிட்டாய்?
என இரங்கிக் கூறுவதாயும் உள்ளது.                              83