4031. | 'நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர் போல் இயற்கையும், சீலமும், போற்றலை; வாலியைப் படுத்தாய்அலை; மன் அற வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே! |
விறல் வீரனே - வெற்றியை உடைய வீரனே!நூல் இயற்கையும் - அற நூல்களின் விதி முறைகளையும்; நும் குலத்து உந்தையர் போல் - உங்கள் குலத்து மூதாதையரைப் போன்றவர்களது; இயற்கையும் - இயல்பையும்; சீலமும் - நல்லொழுக்கத்தையும்; போற்றலை - போற்றாது விட்டாய். வாலியைப் படுத்தாய் அலை - (அதனால்) நீ வாலியை அழித்தாய் அல்லை; மன் அற வேலியை - அரச தருமத்தின் வேலியையே; படுத்தாய் - அழித்திட்டாய். விறல் வீரனே என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நூல் இயற்கை மனு முதலிய அறநூல்களில் கூறப்பட்ட விதி முறைகள். உந்தையர்போல் இயற்கை குலத்து மூதாதையர் கடைப்பிடித்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் இயல்பு. 'வாலியை அழித்து விட்டதாக எண்ணாதே. அரச நீதி என்ற வேலியையே அழித்துவிட்டாய்' என இராமனது தகாத செயலைச் சுட்டிக் காட்டினான. 'வாலியைப் படுத்தாயலை' என உண்மையை ஒழித்ததால் விலக்கணி எனப்படும். மன் அறம் - நிலைபெற்ற தருமம் எனினும் அமையும். நும் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. ஈற்றடிகள் இரண்டும் நயமிகு அடிகளாம். 97 |