4032. | 'தாரம் மற்றும் ஒருவன் கொள, தன் கையில் பார வெஞ் சிலை வீரம் பழுதுற, நேரும் அன்று, மறைந்து, நிராயுதன் மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே?' |
தாரம் - உன் மனைவியை; மற்று ஒருவன் கொள - வேறொருவன் கவர்ந்து கொள்ள; தன்கையில் - (அவனைக் கொல்லாமல், வேறு ஒருவனைக் கொல்லுதலால்)உன் கையில்; பார வெஞ்சிலை - (ஏந்திய) சுமையான கொடிய வில்லின்; வீரம் பழுதுற - வீரம் கேடுறும் படி; வில் இகல் வல்லது - வில்லைக் கொண்டு போர் செய்வதில் வல்லவனானது; நேரும் அன்று - வெளிப்படையாக நேரிலேயும் வராமல்; மறைந்து - மறைந்து நின்று; நிராயுதன் மார்பின் எய்யவோ - ஆயுதம் இல்லாதவன் மார்பில் எய்வதற்குத்தானோ? மனைவியை வஞ்சனையால் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லாமல் விடுத்ததும் வீரத்திற்க இழுக்கு; அதனினும் ஆயுதமில்லாத ஒருவன் மார்பில் மறைந்திருந்து அம்பு தொடுப்பது பேரிழிவு தரும் என வாலி உரைத்தனன். பகைவனைக் கொல்லுதற்குப் பயன்படாமல் கையில் சுமையாக இருப்பது பற்றிப் 'பார வெஞ்சிலை' என்றான். கையில் வில்லை வெறுமனே வைத்துக் கொள்ளக் கூடாது என்று நிராயுதன் மார்பில் அம்பினை எய்தனையோ? இத்தகைய செயல் வீரத்திற்கு இழுக்கு ஆதலின் 'வீரம் பழுதுற' என்றான். நிராயுதன் - ஆயுதம் இல்லாதவன். சுக்கிரீவனைத் தரையில் மோதுவதற்காக இரு கரங்களிலும் அவனைத் தூக்கிய நிலையில் இராமன் அம்பு எய்தான்; அப்போது வாலி நிராயுதனாக இருந்தான் என்பதை (3999) நினைவு கூர்தல் வேண்டும். போரில் ஆயுதமில்லாதவனைப் பொருதல் அறம் அன்று என்பதைப் 'படையிட்டார். . . என்றும் அணுகாரே செவ்வகைச் சேவகர் சென்று' (சிறுபஞ்ச மூலம் - 41) என்றமை காண்க. இது பற்றியே 'இவனைக் கொன்றல் உன்னிலன், 'வெறுங்கை நின்றான்' எனக் கொள்ளா' (7266) என வருதல் காண்க. 98 |