இராமன் தன் செய்கையில் தவறில்லை என மொழிதல் 4034. | ' ''பிலம் புக்காய் நெடு நாள் பெயராய்'' எனப் புலம்புற்று, உன் வழிப் போதலுற்றான்தனை, குலம்புக்கு ஆன்ற முதியர், ''குறிக் கொள் நீ - அலம் பொன் தாரவனே! - அரசு'' என்றலும், |
பிலம்புக்காய் - (முன்னாளில் மாயாவி என்னும் அரக்கனைத் தொடர்ந்து) பாதாள வழியினுள்ளே சென்ற நீ; நெடுநாள் பெயராய் - நெடுங்காலம் மீண்டு வாராமலே தங்கிவிட்டாய்; எனப் புலம்புற்று - என்று வருத்தமடைந்து; உன் வழிப் போதலுற்றான் தனை - நீ சென்ற பாதாள வழியிலேயே உன்னைத் தொடர்ந்து தேடிச் செல்ல முற்பட்ட உன் தம்பியாகிய சக்கிரீவனை (நோக்கி); குலம்புக்கு ஆன்ற முதியர் - (உங்கள்) குலத்தில் தோன்றி அறிவால் நிறைந்த பெரியோர்கள்; அலம்பொன் தாரவனே - அசைகின்ற பொன் மாலையை அணிந்தவனே!குறிக்கொள் - (நாங்கள்) சொல்வதை ஊன்றிக் கேட்பாயாக; நீ அரசு - நீயே எமக்கு அரசனாவாய்; என்றலும் - என்று கூறிய அளவில். . . . இதுவும் அடுத்துவரும் இரு பாடல்களும் குளகமாய் இயைந்து ஒருவினை கொண்டு முடியும். முதலில் சுக்கிரீவனிடத்துக் குற்றம் இல்லாமையினையும், வாலியிடத்துக் குற்றம் இருத்தலையும் இராமன் சுட்டிக் காட்டலானான். குலம் புக்கு ஆன்ற முதியர் - குலத்தாலும் அறிவாலும் சிறந்த பெரியோர். நெடு நாள் - இருபத்தெட்டு மாதம். வாலியைக் காணாது அவனைத் தேடிச் செல்ல முற்பட்ட சுக்கிரீவனை முதியவர்கள்தான் 'நீயும் பிலத்துவழியில் சென்று விட்டால் என்ன ஆவது? எங்களைக் காப்பாற்றுவார் யார்? நீயாவது ஆட்சி ஏற்ற எம்மைக் காப்பாய்' என வேண்டித் தடுத்து நிறுத்தினர் என்பதாம். சுக்கிரீவன் இறக்கத் துணிந்தமையை மனத்தில் கொண்டு இங்ஙனம் தடுத்து நிறுத்தினர் என்க. அலம்பு என்பது 'அலம்' எனக் குறைந்துவந்தது. 100 |