4036.'பற்றி, ஆன்ற படைத்
      தலை வீரரும்,
முற்று உணர்ந்த
      முதியரும், முன்பரும்,
''எற்றும் நும் அரசு
      எய்துவையாம்'' என,
கொற்ற நன் முடி கொண்டது,
      இக் கோது இலான்.

     ஆன்ற படைத் தலை வீரரும் - (அது கேட்டு) ஆற்றல் நிறைந்த
படைத்தலைவர்களாகிய வீரர்களும்; முற்று உணர்ந்த முதியரும் - (அரசியல்
நெறிகளை) முழுவதும் உணர்ந்த அமைச்சர் போன்ற அனுபவம்
மிக்கவர்களும்; முன்பரும் - (மற்றுமுள்ள) பெரியோர்களும்;
எற்றும் - ''(நிகழ்ந்த செயல்) எத்தன்மைத்து ஆயினும்; நும் அரசு எய்
துவையாம் -
உங்கட்குரிய அரசாட்சியை நீ அடைவாயாக''; என - என்று
கூறி வற்புறுத்த; இக்கோது இலான் - (அதனால்) குற்றமற்ற இந்தச்
சுக்கிரீவன்; கொற்ற நன்முடி கொண்டது - வெற்றிக்கு அறிகுறியான
மணிமுடியைச் சூட்டிக் கொள்ள நேர்ந்தது.

     'நும்மரசை நீயே பெறுக' எனப் படைத்தலைவர் முதலியோர்
வற்புறுத்தலே சுக்கிரீவன் அரசை ஏற்கவேண்டி வந்ததால் அவன்மீது
குற்றமில்லை என இராமன் உணர்த்தினான்.  எற்றம் - வாலி, மாயாவி
ஆகியோரின் செய்தி எவ்வாறாயினும் என்பது பொருள்.  நும் அரசு -
வானரக் குலத்திற்குரிய அரசாட்சி.  'அரிகள் ஆணையால் கொடுத்தது உண்டு;
இவன் கொண்டனன் கொலாம்?' (3841) என முன்னர்க் கூறியதும் காண்க.
கொண்டது - தொழிற்பெயர் வினைமுற்றின் தன்மையடைந்தது.  'கோது
இலான்' என இராமன் சுக்கிரீவனைக் குறித்தல் காண்க.               102