4040. 'அன்ன தன்மை
      அறிந்தும், அருளலை;
பின்னவன் இவன்
      என்பதும் பேணலை;
வன்னிதான் இடு
      சாப வரம்புடைப்
பொன் மலைக்கு அவன்
      நண்ணலின், போகலை;

    அன்ன தன்மை அறிந்தும் - அங்ஙனம் அவன் அஞ்சி ஓடி ஒளிந்து
கொண்ட நிலையை அறிந்தும்; அருளலை - நீ அவன் மீது அருன்
காட்டவில்லை.இவன் பின்னவன் என்பது பேணலை - இவன் (உனது)
தம்பி என்பதையும் எண்ணிப் பேணாது விட்டாய்; வன்னி தான் இடு -
மதங்க முனிவர் இட்ட; சாப வரம்புடை - சாபமாகிய தடை எல்லையை
உடைய; பொன் மலைக்கு - அழகிய ருசிய முகமலைக்கு; அவன்
நண்ணலின் -
அச்சுக்கிரீவன் சென்ற சேர்ந்ததால்; போகலை - நீ அங்குச்
செல்ல வில்லை.  (அதனால் அவன் உயிர் பிழைத்தான் என்பதாம்).

     அஞ்சி ஓடியவன்மீது அருள் காட்டாமையும், தம்பி என்ற உறவு கருதாது
அன்பில்லாமல் நடந்து கொண்டதும் வாலிபால் காணப்படும் குற்றங்களாம் என
இராமன் எடுத்துக் காட்டினான். சாபத்திற்கு அஞ்சி, அந்தச் சுக்கிரீவன் உள்ள
இடத்திற்கு வாலி செல்லாததால் சுக்கிரீவன் உயிர்பிழைத்திருந்தான்
என்பதையும் உணர்த்தினான்.  வன்னிசாபம் - 'இங்கு வாலி வந்தால் தலை
வெடித்து இறப்பானாக' என்பது.  'இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் -
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால்' (3851) என்றது காண்க.  ஈண்டுப்
பொன்மலை என்றது 'ருசியமுக பர்வதம்' என்னும் அழகிய மலையனை.
பொன் - அழகு. அருளலை, பேணலை, போகலை என்பன முன்னிலை
ஒருமைவினைமுற்றுக்கள்.                                      106