4043. 'தருமம் இன்னது எனும்
      தகைத் தன்மையும்,
இருமையும் தெரிந்து,
      எண்ணலை; எண்ணினால்,
அருமை உம்பிதன் ஆர்
      உயிர்த் தேவியை,
பெருமை நீங்கினை,
      எய்தப் பெறுதியோ?

     தருமம் இன்னது எனும் - அறம் இத்தன்மையது என்று சொல்லப்
பெறும்; தகைத் தன்மையும் - தகுதியையும்; இருமையும் - இம்மை, மறுமைப்
பயன்களையும்; தெரிந்து எண்ணலை - ஆராய்ந்து எண்ணினாய் அல்லை.
எண்ணினால் - நீ அவ்வாறு எண்ணியிருந்தால்; அருமை உம்பிதன் -
பெறுதற்கரிய உன் தம்பியின்; ஆர் உயிர்த் தேவியை - அரிய உயிர்
போன்ற மனைவியை; பெருமை நீங்கினை - உன் பெருமை நீங்கியவனாய்;
எய்தப் பெறுதியோ -
அடையப் பெறுவாயோ?

     தருமத்தின் தகுதியினையும், இருமைப் பயன்களையும் எண்ணிப்பாராது
அரிய தம்பியின் மனைவியைக் கவர்ந்தது பெருமைக்குரிய செயலன்று என்று
வாலிக்கு இராமன் உணர்த்தினான்.  இருமை - இம்மையின் புகழும்
மறுமையில் வீடுபேறும்.  பிறன் மனை நயத்தலாகிய தீய செயல் செய்கையால்
இம்மையில் பழியும் மறுமையில் நரகமும் கிடைக்கும் என்பது
உணர்த்தப்பட்டது.  சுக்கிரீவனின் அருமையை உணர்த்த 'அருமை உம்பி'
என்றான்.  'அறம், புகழ், கேண்மை, பெருமை இந்நான்கும் பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரா' (நாலடி - 82), பகை, பாவம், அச்சம், பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான்கண்'' (குறள் - 146) என்றமையால் பிறன்மனை
விழைவான் இழிவு கூறப்பெற்றமைகாண்க.                        109