4044. | 'ஆதலானும், அவன் எனக்கு ஆர் உயிர்க் காதலான் எனலானும், நிற் கட்டனென்; ஏதிலாரும், எளியர் என்றால், அவர் தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்துஅரோ. |
ஆதலானும் - (நீ இவ்வாறெல்லாம் செய்தாய்) ஆதலாலும்; அவன் எனக்கு - அந்தச் சுக்கிரீவன் எனக்கு; ஆருயிர்க் காதலான் எனலானும் - அரிய உயிர் போன்ற நண்பன் ஆனதாலும்; நின் கட்டனென் - உன் உயிரைப் பறித்தேன். ஏதிலாரும் - அயலாராயினும்; எளியர் என்றால் - (தீயோரால் துன்புறுத்தப்படும்) எளிய நிலையினர் என்றால்; அவர் தீது தீர்ப்பது - அவர்களது துன்பத்தைப் போக்குவது; என் சிந்தைக் கருத்து - என்னுடைய உள்ளக் கருத்தாகும். ஆதலான் என்றது முன் கூறியவற்றைக் குறித்தது. வாலி பெரும்பிழை செய்தமையாலும், சுக்கிரீவன் தன் நண்பன் ஆனதாலும், எளியோரைக் காப்பதைத் தான் கொள்கையாகக் கொண்டதாலும் சுக்கிரீவனைக் காக்க வாலியைக் கொல்ல வேண்டியதாயிற்று என்று இராமன் கூறினான். நிற் கட்டனென் - களை பறிப்பது போலப் பறித்ததைக் குறிக்கும். வாலி அறம் வளராமல் தடுக்கும் களையாக இருந்தமை புலப்படுத்தப் பெற்றது. நிற்கட்டனென் - இரண்டாம் வேற்றுமைத் தொகை. 'பிலம்புக்காய்' என்பது முதல், 'ஆதலானும்' என்னும் இப்பாடல் வரையுள்ள பதினொரு பாடல்களும், இராமன் தான் வாலியைக் கொன்ற செயல் அறத்தொடு பொருந்தியதே என்பதை வாலிக்கு உணர்த்தும் வகையில் அமைந்தனவாகும். 110 |