வாலியின் எதிர்வாதம் 4045. | 'பிழைத்த தன்மை இது' எனப் பேர் எழில் தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது இழைத்த வாலி, 'இயல்பு அல, இத் துணை; விழைத் திறம், தொழில்' என்ன விளம்புவான்: |
பிழைத்த தன்மை இது என - '(நீ) தவறு செய்த விதம் இது' என்று; பேர்எழில் தழைத்த வீரன் - மிக்க அழகு நிரம்பிய வீரனாகிய இராமன்; உரை செய - வாலிக்கு எடுத்துரைக்க; தக்கிலாது இழைத்த வாலி - தகாத செயலைச் செய்த வாலி; இத்துணை - (நீ கூறிய) இவ்வளவு நீதிகளும்; இயல்பு அல - வானங்களான எமக்குப் பொருந்துவன அல்ல; விழைத்திறம் தொழில் - விரும்பியவாறு தொழில் செய்வதே (எமக்கு உரியது); என்ன - என்று கூறி; விளம்புவான் - மேலும் சொல்பவனானான். பேரெழில் தழைத்தல் - செழித்து விளங்கும் பேரழகு. பேரெழில் தழைத்த வீரன் என்றது இராமனை. 'மானிடற்க எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட ஒண்ணுமோ (1088) என்றமை காண்க. தக்கிலாது - வினையாலணையும் பெயர். இயல்பல இத்துணை விழைத்திறம் என்பதற்கு - தகுதியில்லாதவனவாக நீ கூறிய இவ்வளவும் நாங்கள் விரும்பிச் செய்யத்தக்க தொழில்களாகும் எனவும் பொருள் கொள்வர். வாலி தன்மீது கூறப்பட்ட குற்றங்களை மறுக்க முயல்வதை இங்குக்காணலாம். 111 |