4048. | 'பெற்றி மற்று இது; பெற்றது ஒர் பெற்றியின் குற்றம் உற்றிலன்; நீ, அது கோடியால் - வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய்!' எனச் சொற்ற சொல் துறைக்கு உற்றது, சொல்லுவான்: |
வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய் - என்னை வெற்றி கொண்ட தோர் ஒப்பற்ற வெற்றியை உடையவனே!பெற்றி இது - (எங்கள் பிறப்பிற்குரிய) தன்மை இது; பெற்றது ஒர் பெற்றியின் - நான் அடைந்துள்ள பிறவியின் தன்மைப்படி; குற்றம் உற்றிலன் - யாதொரு குற்றமும் செய்திலேன்; அது நீ கோடி - அதனை நீ மனத்தில் கொள்வாய்; என - என்று; சொற்ற சொல் துறைக்கு- வாலி சொன்ன சொற்களின் போக்கிற்கு; உற்றது சொல்லுவான் - பொருத்தமான மறுமொழியை (இராமன்) சொல்லத் தொடங்கினான். வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய் - வெற்றிகளுள்ளும் மேம்பட்ட வெற்றியை உடையவனே என்றும் பொருள் கொள்வர். எவராலும் வெல்ல முடியாத தன்னை இராமன் வென்றதால் அவ் வெற்றியைப் பெரு வெற்றியாகக் குறித்தான் என்க. 'கொள்தி' என்பது கோடி என நின்றது. கோடி - கொள் + தி. தி முன்னிலை ஏவல் விகுதி. மற்று. ஆல் என்பன அசைகள். தன் பிறப்பின் இயல்பு காட்டி வாலி, தான் குற்றமற்றவன் என உரைத்தான். 114 |