4053.'நன்று, தீது, என்று இயல்
      தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ,
      விலங்கின் இயல்?
நின்ற நல் நெறி,
      நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை, உன்
      வாய்மை உணர்த்துமால்.

     விலங்கின் இயல் - விலங்குகளின் இயல்பாவது; நன்று தீது என்று -
நல்லது இது, தீயது இது என்று; இயல் தெரி - அதனதன் இயல்புகளை
உள்ளபடி உணர்கின்ற; நல் அறிவு இன்றி - நல்ல அறிவில்லாமல்; வாழ்வது
அன்றோ -
(மனம் போனவாறு) வாழ்வது அல்லவா? நின்ற நல்நெறி -
நிலைபெற்ற நல்ல அற நெறிகளில்; நீ அறியாநெறி - நீ ஆராய்ந்து உணராத
அறவழி; ஒன்றும் இன்மை - ஒன்றும் இல்லை என்பதை; உன் வாய்மை
உணர்த்தும் -
இப்பொழுது நீ பேசிய உன் வாய்மொழியே உணர்த்தும்.

     நல்லறிவு - நல்லது.  தீயதைப் பகுத்துணர வைத்துத் தீயநெறியினின்று
விலக்கி நல்லவழியில் செலுத்துவதாகும்.  அறிவின் இலக்கணம்
வகுக்கப்பட்டமை இங்குக் காண்க.  ''சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பதறிவு'' (குறள். 422) என்றார் வள்ளுவர்.

     எல்லா நன்னெறிகளையும் அறிந்தும் அறநெறிக்கு மாறாக நடந்து
கொண்டது வாலியின் குற்றம் என உணர்த்தப்பட்டது.  ஏனெனில் அவன்
வாய்ச் சொற்களே அவன் அறநெறி எது என்பதை நன்கு அறிந்தவன்
என்பதைபுலப்படுத்தி விட்டது.                                   119