4054. | 'தக்க இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே; மனுவின் நெறி புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே. |
தக்க இன்ன - ஏற்கத் தகுதியானவை இவை; தகாதன இன்ன - ஏற்கத் தகுதியில்லாதவை இவை; என்று - ; ஒக்க - நீதி நூல் முறைமைக்கு ஏற்ப; உன்னலர் ஆயின் - எண்ணாதவர்களானால்; உயர்ந்துள மக்களும் - உருவாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும்; விலங்கே - விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்; மனுவின் நெறி புக்கவேல் - மனுதர்மம் வகுத்த நன்னெறியில் நடக்குமாயின்; அவ்விலங்கும் - அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும்; புத்தேளிரே - தேவர்களுக்கு ஒப்பானவையே. ஐம்பொறி உணர்வும், உணவு உறக்கம் போன்ற செயல்களும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவை தீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும் மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால், மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் எண்ணப்படுவர். விலங்காய்ப் பிறந்தும் நீதி நெறியோடு வாழுமாயின் விலங்கும் தேவர்கட்குச் சமமாக மதிக்கப்படும் என்பதாம். நன்று தீது உணர்ந்த விலங்குக்கு உள்ள சிறப்பு விளக்க 'விலங்கும் புத்தேளிரே' என்றார். மக்களும் - உம்மை உயர்வு சிறப்பு:விலங்கும் -இழிவு சிறப்பும்மை: ஏகாரங்கள் தேற்றம். 120 |