4061.'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

     சிறியன சிந்தியாதான் - அற்பத்தனமான எண்ணங்களை
எண்ணாதவனாகிய வாலி; தாய் என உயிர்க்கு நல்கி - (இராமனை நோக்கி)
'தாய்போல எல்லா உயிர்களிடத்தும் அருள் காட்டி; தருமமும் தகவும்
சால்பும் -
அறமும் நடுவுநிலைமையும் நற்குண நிறைவும்; நீ என நின்ற
நம்பி -
நீயே என்று சொல்லும்படி நின்ற நம்பியே!நெறியினின் நோக்கும்
நேர்மை -
(அறநூல்கள் சொன்ன) நெறிப்படி (நீ) பார்க்கும் நேர்வழியை; நாய்
என நின்ற எம்பால் -
நாய் போன்ற இழிந்த நிலையினராய் எம்மிடத்து;
நவை அற உணரலாமே -
குற்றமற உணர்தல் இயலுமோ?தீயன
பொறுத்தி-
(அறியாமையால் நான் செய்த) தீமைகளைப் பொறுத்தருள்வாய்';
என்றான் - என்று (இராமனிடம்) வேண்டினான்.

     அறியாமை நீங்கப்பெற்று ஞானமடைந்து இராமனின் பெருமை உணர்ந்து
பேசும் வாலியை இப்பாடலில் காண்கிறோம்.  கம்பரும் வாலியின்
மனமாற்றத்தை அறிவிக்கும் வகையில் 'சிறியன சிந்தியாதான்' எனக்குறித்தது
காண்க.  பிறர் குணங்களைக் குற்றமாகக் கொள்ளுதல், தன்னலம் பற்றிய
சிந்தனை, தருக்கு, சொல்லும் செயலும், மனமும் வேறாதல் முதலிய கீழ்மை
இயல்புகள் இல்லாதவன் என்பது 'சிறியன சிந்தியாதான்' என்ற தொடரின்
பொருள்.  சிறியன சிந்தியாதான் என்ற தொடர், இதுவரை அழியும்
இயல்பினதாகிய அரசு, செல்வம் ஆகிய பொருள்களை மதித்து இராமனை
நிந்தித்த வாலி,  அந்நிலையைக் கடந்து 'பெரியன சிந்திக்கும்' நிலையை
அடைந்தான் என்பதைக்குறிப்பாக உணர்த்துகிறது என்பர்.  தாயென உயிர்க்கு
நல்கி - அன்பு காட்டுவதில் நிகரற்றவன் ஆதலின் 'தாயென' உரைக்கப்பட்டது.
'தாய் ஒக்கும் அன்பில்' (171) என்றதும் காண்க. இராமன் இன்றி உலகில்
தருமமும் தகவும் சால்பும் இல்லையாதலின் அவற்றின் வடிவமாக நின்றவன்
இராமன் என்பதால் 'தருமமும் தகவும் சால்பும் அவற்றின் வடிவமாக
நின்றவன் இராமன் என்பதால் 'தருமமும் தகவும் சால்பும் நீ என நின்ற'
என்றான்.  இஃது 'அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறுடைத் தருமமே
தவிர்க்குமோ தன்னைத் தான்' (3966) என வாலி தாரைக்கு முன் கூறியதிலும்
விளங்குவது காண்க.  நம்பி - ஆடவரில் சிறந்தவன். அண்மைவிளி. தகவு -
நடுவுநிலைமை. 'தக்கார் தகவிலர்' (144) என்ற குறளில் இப்பொருள் வருதல்
காண்க.  நாயென - இங்கு நாய் இழிந்த பிறவி என்பதைக் குறித்து நின்றது.
'நாய்க் குகன்' என்று எனை ஓதாரோ? (2316) எனக்குகனும் தன்னை நாயெனக்
கூறிக் கொள்ளல் காண்க. தீயன என்றது பிறன் மனைவியைக் கவர்ந்து
வந்தமையும் சரணடைந்த தம்பியைக் கொல்ல முற்பட்டதுமாகச் செய்த
தீமைகளைக் குறிக்கும்.

     'இராமபிரானால்' அடிபட்டு ஞானமடைந்த வாலியை நோக்கி, அவனுக்கு
மறுபடியும் உயிரையும் உடலையும் அளிப்பதாகக் கூற வாலி அதனைமறுத்து
அப்பெருமான் சந்நிதியில் இறந்து போவதையே பெருமையாகக் கொண்டான்'
என்று 'இராமசரிதமானஸம்' என்னும் துளசிதாசர் இராமாயணம் கூறும்.   127