4064.'புரம் எலாம் எரி செய்தோன்
      முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என்
      வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என்
      உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது
      வேறு உளதுஅரோ, தருமமே?

     புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் - திரிபுரங்கள் முழு
வதனையும் எரித்துவிட்ட சிவபிரான் முதலிய தேவர்கள்; பொரு இலா வரம்
எலாம் -
ஒப்பில்லாத வரங்கள் எல்லாவற்றையும்; உருவி - ஊடுருவிச்
சிதைத்து; என் வசை இலா - எனது குற்றமற்ற; வலிமை சால் - வலிமை
மிக்க; உரம் எலாம் உருவி - மார்பு முழுவதும் துளைத்துச் சென்று; என்
உயிர் எலாம் நுகரும் -
என் உயிர் முழுதும் உட் கொண்ட; நின் சரம்
அலால் -
உனது அம்பே அல்லாமல்; தருமம் பிறிது வேறு - தருமம்
என்பது வேறொன்று தனியாக; உளது - இருக்கின்றதோ? அரோ - அசை.

     தான் பெற்ற வரங்களையும் வலிமையினையும் அழித்து உயிரையும்
கவர்ந்ததால் இராமனது அம்பினைத் தருமத்தின் வடிவம் என வாலி ஏற்றுக்
கொண்டான்.  தீயன ஒழித்துத் தருமத்தை நிலைபெறச் செய்ததால் அதனைத்
தருமம் என ஏற்ற வாலி, தான் செய்தது தவறு என்பதையும் உணர்ந்தான்.
''நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார் நடை அல்லா வாரம் கொண்டார், மற்று
ஒருவற்காய் மனை வாழும் தாரம் கொண்டார்; என்ற இவர் தம்மைத் தருமம்
தான் ஈரும் கண்டாய்'' (3247) என்ற மாரீசன் கூற்றுக் காண்க.

     புரமெலாம் எரிசெய்தோன் முதலினோா என்றமை - வாலிக்குச்
சிவபிரான், இந்திரன் முதலியோர்  அளித்த வரங்களைக் குறித்தது.  உரம்
எலாம் - மார்பு முதலிய உயிர் நிலைகளை; வலிமைக்கு வசை - போரில்
தோற்றல், புறமுதுகிடல் போன்றன; உயிர் நுகர்தல் - உயிரை உடம்பினின்று
நீக்குதல்; இலக்கணை. உளது என்னும் முற்றுச்சொல் வினாப் பொருளில்
வந்தது.                                                      130