4074. | 'நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் கற்கின்றது இவன்தன் நாமம்; கருதுவது இவனைக் கண்டாய்; பொன் குன்றம் அனைய தோளாய்! பொது நின்ற தலைமை நோக்கின், எற் கொன்ற வலியே சாலும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. |
பொன் குன்றம் அனைய தோளாய் - பொன் மயமான மேருமலை போன்ற தோள்களை உடையவனே!நிற்கின்ற செல்வம் வேண்டி - என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் செல்வமான வீடுபேறு வேண்டி; நெறி நின்ற பொருள்கள் எல்லாம் - அதற்குரிய நல்லொழுக்க நெறியைக் கடைபிடித்து நின்ற உயிர்கள் யாவும்; இவன்தன் நாமம் கற்கின்றது - இவ்விராமனுடைய திருப்பெயரினையே நாவால் பயில்கின்றன; இவனைக் கருதுவது - இவ்விராமனையே மனத்தால் தியானிக்கின்றன; கண்டாய் - இதனை உணர்வாய்.பொதுநின்ற தலைமை நோக்கின் - பொதுவாக இவனுடைய சிறப்பை நோக்கினால்; எற்கொன்ற வலியே சாலும் - என்னைக் கொன்ற வன்மையொன்றே சான்றாகப் போதும்; இதற்கு ஒன்றும் ஏது வேண்டா - இதற்குச் சான்று வேறொன்றும் வேண்டுவதில்லை. பிற செல்வங்கள் போல் அல்லாது அழியாமல் நிலைத்து நிற்கும் சிறப்புடைத்தாதலின் 'நிற்கின்ற செல்வம்' என்றான். இதனைச் 'சிறு காலை இலா, நிலையோ திரியா, குறுகா, நெடுகா, குணம் வேறுபடா, உறுகால் கிளர்பூதம் எலாம் உகினும் மறுகா நெறி' (2606) எனச் சரபங்கர் குறிப்பிடுவர். சென்று அடையாத திரு என்று தேவாரம் கூறுவது இதுவே. நெறி நின்ற பெபருள்கள் - உயிர்கள். நெறி என்றது ஞானம், யோகம், பத்தி, பிரபத்தி எனவும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் இவ்வாறு பகுத்துரைக்கப்படும் நல்லொழுக்க நெறிகளை, 'கற்கின்றது இவன்தன் நாமம்' என்று இராம நாமத்தின் பெருமை கூறப்பட்டது. 'கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ' (திருவாய் மொழி 7.5.1) என்பர் நம்மாழ்வார். தான் பெற்ற நல் உணர்வைத் தன் தம்பியும் பெற விரும்பியதால் 'கருதுவது இவனைக் கண்டாய்' என உணர்த்தினான். இராமனை நினைப்போர் வீடுபேறு அடைவர் என்பதைவாலி வதையில் காண்பதோடு, விராடன், இந்திரன், கவந்தன், முதலானோர் துதிகளாலும் உணரலாம். இராமன் பரம்பொருளே என்பதை ஆங்காங்கே கவிச்சக்கரவர்த்தி நிலைநாட்டி அறிவுறுத்துவதையும் காணலாம். பரம்பொருளான இறைவன் அம்புமட்டுமே வாலியின் மார்பைத் துளைக்கவல்லது என்னும்போது வாலியின் வன்மைபுலனாகிறது. 140 |