4078.'அரசியல் பாரம் பூரித்து
      அயர்ந்தனை இகழாது, ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா
      வாழுதி; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே
      எண்ணுதி; எண்ணம் யாவும்
புரிதி; ''சிற்றடிமை குற்றம் பொறுப்பர்''
      என்று எண்ணவேண்டா

     அரசியல் பாரம் பூரித்து - ஆட்சிப் பொறுப்பால் மனம் மிகக் களித்து;
அயர்ந்தனை இகழாது -
அறிவு மயங்கி இகழ்ச்சி செய்யாமல்; ஐயன் மரை
மலர்ப்பாதம் -
இராமனுடைய தாமரை மலர் போன்ற பாதங்களை; நீங்கா
வாழுதி -
விட்டு நீங்காமல் வாழ்வாயாக.  மன்னர் என்பார் - அரசர்கள்;
எரி எனற்கு உரியார் -
பற்றி எரியும் நெருப்பு என்று உவமையாகக்
கூறுதற்கு உரியவர்கள்; என்றே எண்ணுதி - என்றே நினைத்துக்கொள்;
எண்ணம் யாவும் புரிதி -
(இராமன்) நினைத்த காரியங்களை எல்லாம்
(குறிப்பறிந்து) செய்வாய்.  சிற்றடிமை குற்றம் பொறுப்பர் - அடித்தொண்டு
புரியும் குற்றேவலாளர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வார்கள்;
என்று எண்ண வேண்டா -
என்று நினைத்தல் வேண்டா.

     குற்றேவல் செய்வார் அரசர்களிடம் பழக வேண்டிய முறை பற்றி வாலி
உரைத்தனன்.  ஆட்சிப்பொறுப்பேற்ற மகிழ்ச்சியில் மதி மயங்கல் இயல்பு
எனவும் புலனாகிறது.  மன்னர் எரி எனக்கு உரியார் - 'அகலாது அணுகாது
தீக்காய்வார் போல்க,  இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்' (குறள் 691)
என்றமை காண்க.  பொறுப்பர் என அரசர் வெறுப்பன செய்யற்க என
உரைக்கும் குறட்பாக்களின் (698, 699, 700) பொருள்களும், இங்குப்
பொருந்துவன.  ''அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும், முழையுறை சீயமும்
என்றிவை நான்கும், இளைய, எளிய பயின்றன என்றெண்ணி இகழின்
இழுக்கம் தரும்'' (ஆசாரக் கோவை - 84), ''பழமை கடைப்பிடியார்
கேண்மையும் பாரார், கிழமை பிறிதொன்றும் கொள்ளார் வெகுளின் மன்''
(நாலடி - 46) ''கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த, செவ்வி தெரியாது
உரையற்க! ஒவ்வொரு கால், எண்மையனேனும், அரியன் பெரிது அம்மா; கண்
இலன், உள் வெயர்ப்பினான்'' (நீதி நெறிவிளக்கம் 45) என்றமையம் காண்க.
மரை - தாமரை என்பதன் முதற்குறை.                             144