4084. | 'தறை அடித்ததுபோல் தீராத் தகைய, இத் திசைகள் தாங்கும் கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம், உன்தன் நிறை அடிக் கோல வாலின் நிலைமையை நினையும் தோறும், பறை அடிக்கின்ற அந்தப் பயம் அறப் பறந்தது அன்றே? |
தறை அடித்தது போல் - (நிலத்துடன் சேர்த்து) ஆணி அறையப் பட்டாற் போன்று; தீராத் தகைய - இடம் விட்டுப் பெயராத தன்மைைை உடையவனாய்; இத்திசைகள் தாங்கும் - இந்த எட்டுச் திசைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும்; கறை அடிக்கு - உரல் போன்ற அடிகளை உடைய எட்டுத் திக்கு யானைகளுக்கு; அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் - தோல்வியை உண்டாக்கிய கொடியவனான இராவணின் நெஞ்சம்; உன்தன் நிறை அடிக்கோல வாலின் -உன்னுடைய பருத்த அடியையுடைய அழகிய வாலின்; நிலைமையை நினைவும் தோறும் - வலிமையை நினைக்கும் போதெல்லாம்; பறை அடிக்கின்ற- பறை அடித்துக் கொள்வது போலத் துடிக்கின்ற; அந்தப் பயம் - அந்த அச்சமானது; அறப் பறந்தது அன்றே - (இப்பொழுது நீ இறத்தலால்) முழுவதும் போய்விட்டதல்லவா? தறையடித்தல் - ஆணி அறைதல். எட்டுத்திக்கு யானைகள் இடம் பெயராமல் நின்றமைக்குத் 'தறை அடித்தது போல்' என்றது உவமை. கறை அடி - உரல் போலும் அடிகளை உடையது என அன்மொழித் தொகையாய் யானையைக் குறித்தது. கண்டகன் - முள் போன்ற கொடிய செயலை உடைய இராவணன். அரக்கர்களைக் கண்டகர் எனக் கூறுவதை, 'கண்டகர்' இடிநிகர் வினையம்' (187). 'கண்டகர் மெய்க்குலம்' (2998), கண்டகர் உய்ந்தார் உவர் (3247) ஆகிய இடங்களிலும் காணலாம். தன்னைத் தாக்கிய எட்டுத் திசை யானைகளின் தந்தங்கள் தனது மார்பில் தாங்கி ஒடியும் படி அவ் யானைகளை வென்று அடக்கினான் ஆதலின் அவனைக் 'கறையடிக்கு அழிவு செய்த கண்டகன்' என்றான். நிறையடிக் கோல வால் - வாலின் அழகு பற்றியே அவனுக்கு 'வாலி' எனப் பெயர் வந்தது என்பது நோக்கத்தக்கது. அந்த வாலியின் எண்திசை யானைகளை வென்ற இராவணனைப் பிணித்தான் வாலி. அந்த வாலை நினைத்த மாத்திரத்தே இராவணன் நெஞ்சு பதறும். அங்ஙனம் இராவணன் வாலை நினைத்துப் பதைக்கும் இயல்பை அனுமன் நகைச்சுவையாக 'வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்ததன்றே' (5888) என்று கூறல் காண்க. இராவணன், வாலியின் வாலால் கட்டுண்ட செய்தியை 'இந்திரச் செம்மல் பண்டோர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச், சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) எனப் பின்னர் அங்கதன் உரைப்பதும் காண்க. 'நீலமா மணிநிறத் தரக்கனை இருபது கரத்தொடொல்க வாலினால் கட்டிய வாலியார்' (3-91-8) எனத் திருஞானசம்பந்தரும் பாராட்டுவார். இத்தகைய வாலியின் வால் வலிமை கூறி அங்கதன் வருந்தினான். 150 |