4088. | 'தோன்றலும், இறத்தல்தானும், துகள் அறத் துணிந்து நோக்கின், மூன்று உலகத்தினோர்க்கும், மூலத்தே முடிந்த அன்றே? யான் தவம் உடைமையால், இவ் இறுதி வந்து இசைந்தது; யார்க்கும் சான்று என நின்ற வீரன் தான் வந்து, வீடு தந்தான். |
துகள் அறத் துணிந்து நோக்கின் - குற்றங்கள் இல்லாமல் ஆராய்ந்து பார்க்குங்கால்; தோன்றலும் இறத்தல்தானும் - பிறந்தலும், இறத்தலும்; மூன்று உலகத்தினோர்க்கும் - மூன்று வகைப்பட்ட உலகங்களில் வாழ்வார்க்கும்; மூலத்தே முடிந்த (அன்றே)- தொடக்கத்தி லேயே வரையறுக்கப்பட்டு முடிவுபெற்ற செயல்களாகும். யான் தவம் உடைமையால் - யான் முன்னர்ச் செய்த பெருந்தவம் உடைமையால்; இவ் இறுதி வந்து இசைந்தது - இத்தகைய நல்ல முடிவு வந்து சேர்ந்தது; யார்க்கும் சான்று என நின்ற வீரன் - அனைத்தும் தோன்றி மறைவதைத் தானழியாமல் கண்டு கொண்டு சாட்சியாய் நிற்கின்ற வீரனான இராமன்; தான் வந்து வீடு தந்தான் - தானே (என்பால் எழுந்தருளி) வீடு பேற்றைத் தந்தருளினான். மூன்று உலகத்தினோர்க்கும் என்றதால் மானிடர், தேவர், நரகர் ஆகியோர்க்குத் தாம் செய்யும் வினைப் பயன் காரணத்தால் பிறப்பும் இறப்பும் உண்டு என்பது பெறப்பெற்றது. 'மூன்று உலகத்தினோர்க்கும்' எனச் சிறப்புப் பற்றி உயர்திணைமேல் வைத்துக் கூறியிருப்பினும் இனம்பற்றி ஏனை அஃறிணை உயிர்களும் கொள்ளப்படும். பிறப்பும் இறப்பும் எல்லா உயிர்கட்கு இயல்பாய் வருவதால், தனக்கு ஏற்பட்ட இறப்புக் குறித்து வருந்த வேண்டா என மகனைத் தேற்றுகையில் யாக்கை நிலையாமையும், உலக இயல்பும் உணர்த்தினான். 'இறப்பு எனும் மெய்ம்மையை, இம்மை யாவர்க்கும், மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ?' (1333), ''இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள் பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன்'' (1976), 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' (குறள் - 339), 'சாதலும் பிறத்தல் தானும் தன் வினைப் பயத்தினாகும்' (சீவக - 269) என்பன இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. தான் முன்பு செய்த தவப்பயன் காரணத்தால் இத்தகைய மரணம் தனக்கு இராமனால் வந்தது என வாலி மகிழ்ந்தான். உலகத்து உயிர்கள் செய்யும் செயல்களையெல்லாம் எப்பொருளினும் உறைபவனாகிய இறைவன் அறிதலால் ''யார்க்கும் சான்று என நின்ற வீரன்'' எனக் குறித்தான். திருமாலின் ஆயிரம் பெயர்களுள் 'ஸாக்ஷி' என்பதும் ஒரு பெயராகும். கிடைத்தற்கரிய வீடுபேற்றினை இராமன் தானே எளியனாய்க் குற்றம் செய்த வாலி முன்னர்த் தோன்றி அளித்தான் என்பதில் இராமனின் பெருங்கருணை புலப்படுதல் காண்க. வாலி, தான் இனிப் பிறவாப் பேற்றினைத் தனக்கு உதவிய இராமனைப் போற்றினான்என்க. 154 |