4089. | 'பாலமை தவிர் நீ; என் சொல் பற்றுதிஆயின், தன்னின் மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள், வில்லும் தாங்கி, கால் தரை தோய நின்று, கட்புலக்கு உற்றது அம்மா! ''மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து'' என, வணங்கு, மைந்த! |
மைந்த - மகனே! பாலமை தவர்நீ - சிறுபிள்ளைத்தனமாக அழுவதை நிறுத்துவாயாக; என் சொல் பற்றுதி ஆயின் - என் வார்த்தையை உறுதியெனக் கொள்வாயானால்; தன்னின் மேல் ஒரு பொருளும் இல்லா - தன்னைக் காட்டிலும் மேம்பட்டதொரு பொருளும் இல்லாத; மெய்ப்பொருள் - பரம்பொருள் தானே; கால் தரை தோய நின்று - தனது திருவடி மண்ணில் படும்படியாக (மனித வடிவங்கொண்டு) நின்று; வில்லும் தாங்கி - வில்லையும் கையில் ஏந்திக் கொண்டு; கட்புலக்கு உற்றது - நம் கண்களால் கண்டு கொள்ளும் வண்ணம் (இராமனாகி) வந்துள்ளது. மால் தரும் பிறவி நோய்க்கு - (எனவே) மயக்கத்தைத் தரும் பிறவி என்னும் நோயை அறவே நீக்குதற்குரிய; மருந்தென வணங்கு - அருமருந்தெனக் கருதி இராமனை வணங்குவாய். 'மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் கால் தரை தோய நின்று' என்றது இறைவன் தன் பரத்துவத்தை விட்டுச் சௌலப்பியத்தை (எளிமை) மேற்கொண்ட நிலையை உணர்த்தும். வில்லும் தாங்கி என்றது - நினைத்த மாத்திரத்தில் எதையும் இயற்ற வல்ல பரம் பொருளாய் இருந்தும் நல்லோர் இடம் தீர்க்க, அல்லோரைத் தண்டிக்க மானிட வடிவம் எடுத்து அதற்கேற்ப வில்லையும் தாங்கிக் தயாராய் நிற்றலைக் காட்டும். கடவுளின் கால்கள் தரையில் தோயாச் சிறப்புடையவாயினும், நம் பொருட்டு அக்கடவுள் இராமபிரானாக அவதரித்துத் தன் கால்தரை தோய் நின்றான் என்பது கருத்து. 'எந்தாய்' இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரை தான்' (2613) என இந்திரன் துதித்தமை காண்க. ஞானியர், யோகியோர் போன்றோர் தம் ஞானக் கண்ணாலும் அறிதற்கரிய பரம்பொருள் இங்கு ஊனக் கண்ணால் காண்பதற்கும் காட்சிக்கு எளியவனாகி வந்த கருணையை வாலி பாராட்டினான் - அம்மா - வியப்பிடைச் சொல். புலக்கு - புலத்துக்கு - அத்துச் சாரியை தொக்கது. மந்திரம், மருந்து, தந்திரம் இவற்றால் தீர்க்க முடியாத பிறவி நோய்க்கு அருமருந்து இராமனே என்பதைத் தெளிந்த வாலி தன் மகனுக்கும் அதை உணர்த்தி அவனை வணங்குமாறு வேண்டினான். ''வெந்திறல் அரக்கர் விடவேர் முதல் அறுப்பான் வந்தனன் மருத்துவன்'' (2674) என அகத்தியர் இராமனைப் புகழ்தலை நோக்குக. கால்தரை, மால்தரும் என்பன எதுகை ஓசை நயம் நோக்கித் திரியாமல் இயல்பாய் நின்றன. பாலமை - சிறுபிள்ளைத் தன்மையால் அழுவது, விளையாட்டுத்தன்மை போன்றன. 155 |