வாலி வீடு பெறுதல் 4093. | தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும், பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்; என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி, அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான். |
தன் அடி தாழ்தலோடும் - (அங்கதன்) தன் திருவடிகளில் விழுந்து வணங்கி அளவில்; தாமரைத் தடங்கணானும் - தாமரை மலர் போன்ற பெரிய கண்களை உடைய இராமனும்; பொன் உடை வாளை நீட்டி - (அவனை அடைக்கலமாக ஏற்றுக்கொண்டமைக்கு அறிகுறியாகத்) தனது அழகிய உடைவாளை (அங்கதனிடம்) நீட்டி; நீ இது பொறுத்தி - 'நீ இதனை ஏற்றுக்கொள்வாய்'; என்றான் - எனப் பணித்தான்; என்னலும் - அவ்வாறு இராமன் சொன்ன அளவில்; உலகம் ஏழும் ஏத்தின - எழுவகைப்பட்ட உலகில் வாழும் உயிர்களெல்லாம் இராமனைத் துதித்தன; வாலி - (அப்போது) வாலியானவன்; அந்நிலை துறந்து, இறந்து - பூத உடலுடன் கூடிய அந்த நிலையை விட்டு, இறந்து; வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் - வானுலகிற்கும் அப்பாற்பட்டதான உயர்ந்த வீட்டுலகினை அடைந்தவனானான். உலகம் ஏழும் ஏத்தின - சுக்கிரீவனுக்குக் கேடு இழைத்த கொடிய வாலிக்கும், அவன் மைந்தனுக்கம் அருள்புரிந்த இராமனது கருணைப் பெருக்கை வியந்து பாராட்டின என்க. ஆற்றல்மிகு வீரர் தம்மை அடைக்கலமாக அடைந்தாரை ஏற்றமைக்கு அடையாளமாகத் தம்மிடமுள்ள உடை வாளைக் கொடுப்பர் என்பது இராமன் அங்கதனுக்கு உடைவாள் கொடுத்த செயலால் உணரப்படுகிறது. இத்தகைய அடைக்கலச் சிறப்பால் இராமனது உடைவாளை ஏந்துதற்குரிய சிறப்புப் பெற்றவன் அங்கதன் ஒருவனே என்ற உண்மையை 'அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த' என வரும் (10327) பாடலிலும் கவிச்சக்கரவர்த்தி உணர்த்தியுள்ளமை நினைத்தற்குரியது. அந்நிலை துறந்து - உலகத் தொடர்பாகிய பாசப் பிணிப்பை அறவே விட்டொழிந்து உயிர் தூய்மையாதல், குற்றம் களைந்து ஞானம் பெற்ற காரணத்தாலேயே வாலி வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். யான், எனது என்னும் செருக்கு அறுப்பான். வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் (குறள் - 346) என்றார் வள்ளுவர். அங்கதனை வாலி இராமனிடம் அடைக்கலமாக அளிப்பதும், அவனுக்கு இராமன் உடைவாள் அளித்ததுமாகிய செய்திகள் வான்மீகம், அத்யாத்மம் ஆகிய நூல்களில் இல்லை. வாலி அங்கதனைச் சுக்கிரீவனிடத்து ஒப்படைத்து உயிர்நீத்தான் என்று அந்நூல்கள் கூறும். கம்பர் அங்கதனைச் சிறப்பிக்க வேண்டி, இராமன் அவனக்கு அடைக்கலம் அளித்து உடைவாளைக் கொடுத்துத் தன் காப்பாளனாகவும் ஏற்றான் என்பர். அங்கதனின் வீரத்தையும், பணிசெய்யும் பாங்கினையும் உணர்த்த 'அங்கதன் தூதுப்படலம்' ன ஒரு தனிப்படலமே பாடியுள்ளார். 'வைதாரையும் வாழ்வித்து வைகுந்தம் சேர்க்கும் பிரான்' என்ற போற்றுதலுக்கேற்ப இராமன் வாலிக்கு வீட்டுலகம் கொடுத்து அருளினான். 159 |