4099. | 'துயராலே தொலையாத என்னையும், பயிராயோ? பகையாத பண்பினாய்! செயிர் தீரா விதி ஆன தெய்வமே! உயிர் போனால், உடலாரும் உய்வாரோ? |
பகையாத பண்பினாய் - (என்னோடு) மாறுபடாத குணத்தை உடையவனே! துயராலே தொலையாத என்னையும் - உன்னை இழந்த துன்பத்தால் இறந்து படாத என்னையும்; பயிராயோ - (உன்னிடம்) அழைத்துக் கொள்ள மாட்டாயா?செயிர் தீரா - (என்னிடத்துச்) சினம் நீங்காத; விதி ஆன தெய்வமே - (எனது) விதியின் வடிவமான கடவுளே! உயிர் போனால் - உயிர் (உடலைவிட்டுப்) பிரிந்து போனால்; உடலாரும் உய்வரோ - உடம்பு மட்டும் அழியாது பிழைத்திருக்க வல்லதோ? வாலியும் தாரையும் ஒரே உயிரினராய், ஒரே மனத்தினராய் ஒன்றி வாழ்ந்ததால் அவர்களிடையே கருத்து வேறுபட்டால் பகைமை (சண்டை) ஏற்பட்டதில்லை என்பது 'பகையாத பண்பினாய்' என்ற தொடரால் புலனாகிறது. தான் குற்றமே செய்யினும் அதனைப் பொறுத்துக் கொண்டு தன்னொடு மாறுபடாத பண்பினைக் கொண்டவன் என்பதாலும் 'பகையா பண்பினாய்' என்றனள் எனலாம். வாலியின் உயிர்நீக்கம் கண்டும் தன் உயிர் நீங்காமல் இருத்தலால் 'என்னையும் பயிராயோ' என வேண்டினாள். தன் கணவன் உயிரைப்போக்கி, தன்னைத் துயரத்தில் ஆழ்த்திய விதியின் கொடுமையை நினைத்து 'செயிர் தீரா விதி ஆன தெய்வமே' என விளித்தாள். ஊழ், பாழ், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட் சொற்கள் எனப் பரிமேலழகர் குறித்தமை நினைவு கூர்க. (திருக். ஊழ். முன்னுரை). வாலியை உயிராகவும் தன்னை உடலாகவும் கருதிய தாரையின் மனநிலை காண்க. இங்ஙனமே வாலியும் தாரையை உயிராகக் கருதினான் என்பதை ஐயா! நீ எனது ஆவி என்றதும் பொய்யோ? (4103) என்ற அடியால் அறியலாம். தலைவி; தலைவனை உயிரெனக் கருதும் மரபினை 'வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரென' என்ற குறுந்தொகை (135)யிலும், 'பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு, உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான் (4169), என்ற பாடலிலும் காணலாம். உடலார் - ஆர் விகுதி இழிவுப் பொருளில் வந்தது. திணைவழுவமைதி. 165 |