4100. | 'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின், பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி, தாம் அறியாரோ நமனார்? அது அன்றுஎனின், சிறியாரோ, உபகாரம் சிந்தியார்? |
நமனார் - (உன் உயிர்கவர்ந்த) யமனார்; நறிது ஆம் நல் அமிழ்து - நறுமணமுடையதாகிய நல்ல அமுதத்தை; உண்ண நல்கலின் - உண்ணும்படி நீ தந்தமையால்; பிறியா இன் உயிர் - உடம்பை விட்டு நீங்காத இனிய உயிரை; பெற்ற பெற்றி - அடைந்துள்ள தன்மையை; தாம் அறியாரோ - தாம் இதுகாறும் அறிந்திலரோ?அது அன்று எனின் - அங்ஙனம் இல்லை என்றால்; உபகாரம் சிந்தியார் - (நீ அமுதளித்ததான) பேருதவியை நினையாதவராகிய; சிறியாரோ - அற்பக்குணம் உடையவரோ? நமனார் - வஞ்சப் புகழ்ச்சியாக 'ஆர்' விகுதி பெற்றது. பிரியா என்பது எதுகை நோக்கிப் 'பிறியா' எனத் திரிந்தது. வாலி கடல் கடைந்து அமரர்க்கு அமுதம் அளித்ததை 'அமரர் யாரும் எஞ்சலர் இருந்தார் உன்னால்' (4086) எனும் அங்கதன் கூற்றிலும் காண்க. தேவர் அனைவரும் வாலிக்குக் கடமைப்பட்டிருக்க, இங்குத் தேவர்களில் ஒருவனான யமனை மட்டும் குறிப்பிடக் காரணம், அவன் வாலியின் உயிரைப் பறித்தமையால் என்க. செய்த உதவியை அறிந்திருந்தும் அதனை நினைவில் கொள்ளாதார் சிறியராவராதலின், யமனின் அற்பக் குணத்தை எண்ணிப்புலம்பினாள். 166 |