4103. | 'நையா நின்றனென், நான் இருந்து இங்ஙன்; மெய் வானோர் திரு நாடு மேவினாய்; ஐயா! நீ எனது ஆவி என்றதும், பொய்யோ? பொய் உரையாத புண்ணியா! |
பொய் உரையாத புண்ணியா - பொய்ம்மொழி பேசாப் புண்ணி யனே! நான் இங்ஙன் இருந்து - நான் இங்கே இருந்து; நையா நின்றனென் - துயர் உற்று வருந்தி நின்றேனாக; மெய் வானோர் திருநாடு - (நீயோ) வாய்மையில் வழாத தேவர்கள் வாழும் விண்ணுலகை; மேவினாய் - அடைந்தாய்; ஐயா - என் தலைவனே!நீ எனது ஆவி என்றதும் - (நீ என்னை நோக்கி) 'நீயே எனது உயிர்' என்றதும்; பொய்யோ - பொய்தானா? வாலி தாரையை உயிராகக் கருதியது போல், தாரையும் வாலியை உயிராகக் கருதியதை 'உயிர் போனால் உடலாரும் உய்வரோ? (4100) என்ற அடிகள் உணர்த்தும். வாலியும் தாரையும் வாழ்ந்த வாழ்வின் அன்பு நிலையை இதனால் அறியலாம். குடும்பத் தலைவன், தலைவியருள் ஒவ்வொருவரும் தம்மை உடலாகவும், மற்றவரை உயிராகவும் அன்பு காட்டி வாழ்வது இயல்பாகும். எனவே தான் இங்குத் தன் உயிர் துடிக்க, உடல் பிரிதல் இல்லை என்பதால் 'நீ எனது ஆவி என்றதும் பொய்யோ' என்றாள். என்றதும் - உயர்வு சிறப்பும்பை. 'நீ எனது ஆவி' எனச் சொன்னது உண்மையாயின் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாதன்றோ' எனப் புலம்பினாள் பொய் உரைத்துவிட்டு உண்மை பேசும் தேவர்கள் உலகில் எங்ஙனம் செல்ல முடிந்தது என்பதற்கு 'மெய் வானோர்' என்றாள். பொய்யோ - ஐயவினா. 169 |