4107. | 'சொற்றேன், முந்துற; அன்ன சொல் கொளாய்; ''அற்றான், அன்னது செய்கலான்'' எனா, உற்றாய், உம்பியை; ஊழி காணும் நீ, இற்றாய்; நான் உனை என்று காண்கெனோ? |
முந்துறச் சொற்றேன் - (சுக்கிரீவனுடன் போர் செய்ய வருவதற்கு) முன்னதாகவே (இராமன் சுக்கிரீவனுக்குத் துணையாகப் போரிட வந்துள்ளான் என்ற செய்தியை) நான் சொன்னேன். அன்ன சொல் கேளாய் - அந்த வார்த்தையைக் ஏற்றுக் கொள்ளாமல்; அற்றான் - விருப்பு வெறுப்பற்ற இராமன்; அன்னது செய்கலான் - அவ்வாறு முறையற்ற செயலைச் செய்யமாட்டான்; எனா - என்று கூறி; உம்பியை உற்றாய் - உன் தம்பியை (எதிர்த்துப் போரிட) வந்தாய்; ஊழி காணும் நீ - ஊழிக் கால முடிவையும் கண்டு வாழவேண்டிய நீ; இற்றாய் - இறந்துவிட்டாய். நான் உனை என்று காண்கெனோ - இனி நான் உன்னை எப்பொழுது காண்பேனோ? இராமன் துணை பெற்று வந்தான் எனத் தாரை கூறிய மொழிகள் - 3958, 3964ல் காண்க. அன்னது செய்கலான். 3956 முதல் 3965 முடிய உள்ள பாடல்களின் கருத்துக்கள். 'ஊழி காணும் நீ' எனத் தாரை நினைத்தது போல், மண்டோதரியும் 'ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன்' (9943) என எண்ணியதுகாண்க. 173 |