4108. | 'நீறு ஆம், மேருவும், நீ நெருக்கினால்; மாறு ஓர் வாளி, உன் மார்பை ஈர்வதோ? தேறேன் யான் இது; தேவர் மாயமோ? வேறு ஓர் வாலி கொலாம், விளிந்துளான்? |
நீ நெருக்கினால் - நீ (உன் மார்பொடு பொருந்த) நெருக்கித் தாக்குவாயானால்; மேருவும் நீறு ஆம் - மேருமலையும் பொடியாய் விடும்; ஓர் வாளி - (அங்ஙனமிருக்க) ஓர் அம்பு; மாறு - உனக்கு எதிராக; உன் மார்பை ஈர்வதோ - உன்னுடைய மார்பைப் பிளந்து விடுவதா?யான் இது தேறேன் - நான் இதனை உண்மையெனத் தெளிய மாட்டேன். தேவர் மாயமோ - இது தேவர்கள் செய்த மாயச் செயலோ?விளிந்துளான் - (அல்லது) இங்கே இறந்து கிடப்பவன்; வேறு ஓர் வாலி கொலாம் - (நீயன்றி) வேறொரு வாலி தானோ? மேருமலையினையும் பொடியாக்க வல்ல வாலியின் மார்பின் வலிமையை நன்கு அறிந்த தாரை, தன் கணவன் அம்பு பட்டு இறந்து கிடப்பதை நேரில் கண்டும் நம்புதற்கு இயலாதவளாய் 'இது தேவர் செய்த மாயமோ? அல்லது இறந்து கிடப்பவன் தன் கணவன் அல்லாத மற்றொரு வாலியோ என ஐயுற்றுக் கலங்கினாள். 174 |