4109.'தகை நேர் வண் புகழ் நின்று, தம்பியார்,
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால்,
உக நேர் சிந்தி உலந்து அழிந்தவால்;
மகனே! கண்டிலையோ, நம் வாழ்வு எலாம்?

     மகனே - (தாரை, அங்கதனை முன்னிலைப்படுத்தி) மைந்தனே!
தம்பியார் - (உன் தந்தைக்குத்) தம்பியரான சுக்கிரீவர்; தகைநேர் - பெருமை
பொருந்திய; வண் புகழ் நின்று - (உன் தந்தையின்) சிறந்த புகழுக்கேற்பப்
பணிந்து நின்று; பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் - (பின்பு உறவு
நிலைமாறி) அவரோடு பகைமை கொள்பவர் தன்மையினால்; உக - உன்
தந்தை இறந்துபடி; நம் வாழ்வு எலாம் - நமது சிறப்பான
வாழ்க்கையெல்லாம்; நேர் சிந்தி உலந்து அழிந்த - தகுதி கெட்டு
அழிந்துவிட்டன.  கண்டிலையோ - இதனை நீ காண வில்லையோ?

     இஃது அங்கதன் அவ்விடத்து இல்லாவிடினும் அவனை முன்னிலை
யாக்கித் தாரை புலம்பியது.  தம்பியார் - பன்மை விகுதியில் கூறியது
வெறுப்பினால் என்க.  வஞ்சப் புகழ்ச்சி. வண்புகழ் நின்று என்பதற்கு
(தமையனின்) புகழின் ஒளியிலே நிலைத்து வளர்ந்து எனப் பொருள்
கொள்ளுதலும் பொருந்தும்.  அழிந்த; பன்மை வினை முற்று.  ஆல் - அசை.
அழிந்தவால் என்பது பாடமாற்றம்.                               175