சுக்கிரீவனுக்கு முடி சூட்டுதல் கலிவிருத்தம் 4115. | புதல்வன் பொன் மகுடன் பொறுத்தலால், முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான், உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க் கதவம் செய்ய கரத்தின் நீக்கினான். |
புதல்வன் - தன் மகனான சுக்கிரீவன்; பொன் மகுடம் பொறுத் தலால்- (அன்று) பொன்னாலாகிய மணி முடியைத் தரிக்கப் போவதால்; முதல்வன் - (தந்தையான) சூரியன்; பேர் உவகைக்கு முந்துவான் - (அதைக் கண்டு)பெரிதும் மகிழ்ச்சி அடைவதற்கு முற்பட்டவனாய்; உதவும் பூமகள் சேர - (அந்த முடிசூட்டு விழாவிற்கு) உதவியாகின்ற திருமகள் வந்து சேரும்படி; ஒண்மலர்க் கதவம் - (அவள் உறைவிட மான) சிறந்த தாமரை மலர்களின்இதழ்களாகிய கதவுகளை; செய்ய கரத்தில் நீக்கினான் - தனது சிவந்த கதிர்களாகிய கைகளினால் திறந்து விட்டான். இரவு கழியக் கதிரவன் இயற்கையாக உதயமாவதை அன்று தன் மகன் மணிமுடி சூட இருப்பதால் முற்பட்டு வந்ததாகவும். தாமரை இயல்பாக இதழ் விரித்தலை, இரவில் குவிந்திருந்த தாமரை மலருக்குள் இருந்த திருமகள் முடி சூடும் கதிரவன் மகனைச் சேர்தற் பொருட்டு அவள் இருந்த தாமரை மலர் வீட்டின் இதழ்க் கதவுகளைத் தன் சுரங்களால் திறந்துவிட்டதாகவும் கூறியதால் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி பொருந்தியது. பொழுது புலரும்போது தாமரை விரிந்தது என்ற எளிய செய்தி கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரின் எழுத்தாணியில் அரிய கற்பனையாகப் புனையா ஓவியமாகத் தீட்டியுள்ள நயம் உணர்க. 1 |