சுக்கிரீவனுக்கு இராமன் கூறிய அறிவுரை

4120.பொன் மா மௌலி
      புனைந்து, பொய் இலான்,
தன் மானக் கழல்
      தாழும் வேலையில்,
நன் மார்பில்
      தழுவுற்று, நாயகன்,
சொன்னான், முற்றிய
      சொல்லின் எல்லையான்:

     பொன் மா மௌலி புனைந்து - (சுக்கிரீவன்) பொன்னாலான சிறந்த
மணிமுடியைத் தரித்துக்கொண்டு; பொய் இலான்தன் - பொய்ம்மொழி
பேசாதவனான இராமனின்; மானக் கழல் தாழும் வேலையில் - பெருமை
பொருந்திய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய பொழுது; முற்றிய சொல்லின்
எல்லையான் -
நிறை மொழியின் எல்லையில் நிற்பவனாகிய; நாயகன் -
தலைவனுமான இராமன்; நன் மார்பில் தழுவுற்று - (அவனைத்) தன் நல்ல
மார்போடு அணைத்துக் கொண்டு; சொன்னான் - (அறிவுரைகளைக்)
கூறலானான்.

     சுக்கிரீவனுக்கு வாக்கு அளித்தவாறு வாலியைக் கொன்று
நாட்டாட்சியைக் கொடுத்துத் தான் கூறியதைத் தவறாது நிறைவேற்றி
வைப்பவனாதலின் இராமனைப் 'பொய்யிலான்' என்றார்.  முற்றிய சொல்லின்
எல்லையான் என இராமனின் பரத்துவ நிலை குறிக்கப்பட்டது.  அயோத்தியில்
முடிசூடும் முன் வசிட்டர் இராமனுக்குக் கூறியதையும், சித்திர கூடத்தில்
இராமன் பரதனுக்குக் கூறியதையும், இங்குச் சுக்கிரீவனுக்கு இராமன்
கூறுவதையும் காண்கையில் முடிசூடும் மன்னனுக்கு ஆன்றோர் அறவுரை
பகர்தல் மரபு என்பது புலனாகிறது.                                   6