4122. | 'வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும், தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும், தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி, சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி. |
வாய்மை சால் அறிவின் வாய்த்த - வாய்மை நிறைந்த அறிவுத் திறம் வாய்க்கப்பெற்ற; மந்திர மாந்தரோடும் - அமைச்சர் முதலிய அரசியல் அறிஞர்களோடும்; தீமைதீர் ஒழுக்கின் வந்த - குற்றமற்ற நல்லொழுக்க நெறியில் ஒழுகும்; திறத்தொழில் மறவரோடும் - வலி மைக்கேற்ற தொழில்களையுடை வீரர்களோடும்; தூய்மை சால் புணர்ச்சி பேணி - தூய்மை பொருந்திய சேர்க்கையை (அவர்கள் பால்) விரும்பிச் செய்து; துகள் அறு தொழிலை ஆகி - குற்றமற்ற செயல்களைச் செய்பவனாகி; சேய்மையோடு அணிமை இன்றி - பிறரோடு மிகவும் விலகாமலும், மிகவும் நெருங்காமலும்; தேவரின் தெரிய நிற்றி - (பிறர் உன்னைத்) தேவர்கள் போலக் கருதும்படி நிற்பாயாக. அமைச்சர் முதலாயினோர் அரசனை அணுகாது நெடுந்தொலைவில் இருத்தலும், மிக அணுகி நெருக்கமாக இருத்தலும் தவிர்க்க வேண்டுவன. மிக விலகினால் அரசனுக்குப் பயன்படாமலும், மிக நெருங்கினால் அரசன் தன்னை அவதமதித்ததாக நினைக்கவும் கூடுமாதலாலும் அகலலும் அணுகலும் நீக்க வேண்டுவன ஆயின. 'மன்னர் என்பார் எரிஎனற்கு உரியார் என்றே எண்ணுதி. . . . சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ண வேணடா' (4078) என வாலி சுக்கிரீவனுக்குக் கூறியதையும் 'அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்' எனக் குறள் (691) குறிப்பதையும் காண்க. தேவரின் தெரிய நிற்றி - அரசன் பிறப்பால் நிலவுலகனே ஆயினும், அவன் செயலால் மக்கட்குத் தெய்வமாகக் கருதப்பட்டதால் தேவர்களைப் போலப் பிறர்க்கு நீ விளங்குவாய் என்றான். ''முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று குறளும் (388), 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' (திருவாய்மொழி - 4 - 8 -) என்று ஆழ்வார் பாசுரமும் கூறியமை காண்க. தகுதியல்லாத வழியால் நட்புக் கொள்ளலாகாது என்பதற்குத் 'தூய்மை சால் புணர்ச்சி பேணி' என்றான். 'சேய்மையோடு அணிமை இன்றி' என்ற செய்தி வான்மீகத்தில் வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுகையில் 'யாருடனும் அதிக நட்புச் செய்யத்தக்கதன்று; நட்பு இல்லாமையும் செய்யத்தக்கதன்று; இரண்டும் பெரிய குற்றமாம். ஆகையால் இடை நிகராய் ஒழுகவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. 8 |