இராமன் உணர்த்தும் நல்லரசு 4123. | ''புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு அனல் அங்கு'' என்று உன்னும் மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே; பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா நகையுடை முகத்தை ஆகி, இன் உரை நல்கு, நாவால். |
உலகம் - இந்த உலகம்; புகை உடைத்து என்னின் - (ஓரிடத்தில்) புகை உண்டாயிற்று என்றால்; அங்குப் பொங்கு அனல் உண்டு - அவ்விடத்தில் கிளர்ந்தெழுகின்ற நெருப்பு உண்டு; என்று உன்னும் - என்று யூகித்தறிகின்ற; மிகை உடைத்து - சிறப்பறிவைக் கொண்டுள்ளது. நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே - (ஆயினும் இந்த அனுமான அறிவோடு) நூல் வல்லோரால் கூறப்படும் சூழ்ச்சியும் (அரசர்க்கு) வேண்டத்தக்கதாகும்; பகையுடைச் சிந்தையார்க்கும் - (உன்னிடம்) பகைமை கொண்ட மனமுடையார்மாட்டும்; பயன் உறு பண்பின் தீரா - (அவரவர் தகுதிக்கேற்பப்) பயன் உண்டாகும்படி இயல்பறிந்து பண்புடன் நடந்து கொள்வதினின்று மாறாமல்; நகையுடை முகத்தை ஆகி - மலர்ச்சி பெற்ற முகமுடையனாகிய; நாவால் இன் உரை நல்கு - நாவினால் இனிமையான சொற்களைச் சொல்வாயாக. மூவகைப் பிரமாணங்களுள் காட்சியை விடுத்து ஏனை அனுமானப் பிரமாணமும் ஆகமப் பிரமாணமும் ஈண்டுக் கூறப்பட்டன. காட்சிப் பிரமாணம் வெளிப்படை யாதலின் கூறவில்லை. இவை உண்மை காணத் துணை செய்வன. மிகை - கண்ணால் கண்டதற்கு மேல், சிறப்பறிவால் ஊகித்தும் அறிவதால் 'மிகை' எனப்பட்டது. நல்லவர்க்கு நல்லவர்களாகவும், அல்லாதார்க்கு அவர்களை ஒடுக்க வேண்டியிருத்தலின் நல்லவர் போன்றவர்களாய் இருக்க வேண்டுமாதலின் 'நூலோர் வினையமும்' எனக் குறித்தான். பகைவரிடமும் இன்முகமும் இன்சொல்லும் கொள்க என்றான். 'மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து, நட்பினுள் சாப்புல்லல் பாற்று', 'பகை நட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஓரீஇ விடல்' (குறள். 829, 830) 'பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (குறள் 487) என்பன ஒப்புநேநக்கத்தக்கன. பகையுடைச் சிந்தையார்க்கும் என்ற உம்மையால் யாவரிடமும் இன்முகமும் இன்னுரையும் வேண்டும் என்பது பெறப்பட்டது. பண்பு - எல்லோர் இயல்புகளும் அறிந்து நடத்தல். 'பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' (கலி. 143 - 8) என்ற கலித்தொகையைக் காண்க. அரசியல் அரங்கில் சூழ்ச்சி வழி பேணுதல் என்றும் உண்டு போலும். அறத்தின் நாயகனாகிய இராமனே பேசுகிறான் என்பதை எண்ண வேண்டியுள்ளது. பகையுறு சிந்தையாரிடமும் பண்போடு நடக்கச் சொல்லும் பெருமானே நூலோர் வினையம் பேணச் சொல்கிறான்! 9 |