4124. | 'தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர் அறு செல்வம்அஃது உன் காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது கருதிக் காண்டி; ஏவரும் இனிய நண்பர், அயலவர், விரவார், என்று இம் மூவகை இயலோர் ஆவர், முனைவர்க்கும் உலக முன்னே. |
தேவரும் வெஃகற்கு ஒத்த- தேவர்களும் விரும்பத்தக்க; செயிர் அறு செல்வம் - குற்றமற அரிய செல்வமாய; அஃது - அது; உன் காவலுக்கு உரியது - உனது பாதுகாவலில் அமைந்திருக்கிறது; என்றால் - என்றால்; அன்னது கருதி - அச்செல்வத்தின் அருமையை மனத்தில் எண்ணி; காண்டி- அதைக் காப்பதில் கருத்தாய் இருப்பாய். உலகம் முன்னே - உலகத்தின் முன்னிலையில்; முனைவர்க்கும் - முனிவர்களுக்கும்; ஏவரும் - எத்ததகயவராயினும்; இனிய நண்பர் - இனிய நண்பர்கள்; விரவார், அயலவர் - பகைவர்கள், இருவருமல்லா நொது மலர்; என்று இம்மூவகை இயலோர் ஆவர் - என்று மூன்று வகைப்பட்ட தன்மையுடையோராவர். பற்று நீங்கிய முனிவர்க்கும், உலகில் உள்ளோர் யாவரும் நண்பர், பகைவர், நொதுமலர் என்ற வகையில் அடங்குவர் எனின், பொருளில் திளைக்கும் சுக்கிரீவன்மாட்டுக் கூற வேண்டுவதில்லை என்றவாறு. அதனால் அரசன் நட்பு, பகைமை, நொதுமல் என்ற வேற்றுமை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும். 'தகுதி என ஒன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப்பெறின்' (குறள் 111) என்றது காண்க. செயிர் அறு செல்வம் - தூய வழியில் ஈட்டிய செல்வம். பெறுதற்கரிய செல்வம் பெற்றதால் உலகினரின் இயல்பை விழிப்புடன் அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 10 |