4127. | ''மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்'' என்றல், சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும், அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல் எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ? |
மங்கையர் பொருட்டால் - மகளிர் காரணமாக; மாந்தர்க்கும் மரணம் எய்தும் என்றல் - ஆடவர்க்கு மரணம் ஏற்படும் என்று கூறும் உண்மையை; சங்கை இன்று உணர்தி - ஐயமின்றி அறிந்து கொள்வாயாக; வாலி செய்கையால் சாலும் - இந்த உண்மையைத் தெளிதற்கு வாலியின் செய்தியே போதுமானது; இன்னும் - மேலும்; அவர் திறத்தினானே - அந்த மகளிர் காரணமாகவே; அல்லலும் பழியும் ஆதல் - துன்பமும் பழியும் நேர்வதை; எங்களில் காண்டி அன்றே - எங்களிடத்துக் காண்கின்றாய் அல்லவா? இதற்கு வேறு உவமை உண்டோ - இதற்கு வேறு எடுத்துக்காட்டு உள்ளதோ? பிறர் மனைவியை விரும்புவதால் மரணம் ஏற்படும் என்பதை வாலி, சுக்கிரீவன் மனைவியை விரும்பி அதனால் இறக்க நேரிட்டால் அறியலாம். எங்களில் என்றது மனைவி சொல்லைக் கேட்டு உயிர் துறந்த தயரதனையும் உளப்படுத்திக் கூறியதாகும். அல்லலும் பழியும் ஆதல் - தயரதன் கைகேயிக்க வரம் அளித்துத் துன்புற்றுப் பழிக்கஞ்சி இறந்தான். சீதையின் சொல்லைக் கேட்டுப் பொன்மானைத் துரத்திச் சென்றதால் மனைவியைப் பிரிந்து வருந்திப் பிறர் கூறும் பழிக்காளானான் இராமன். ''சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன்'' (8772), ''எம்பி வாய்மையான் தூயன உறுதிகள் சொன்ன கொல் கொளேன் போயினென்; பெண் உரை மாறாது போகலால் ஆயது. இப்பழியுடை மரணம்'' (8773); 'பெண்மேல் வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்'' (8651) என இராமனே பின்னர் வருந்திக் கூறுவன காண்க. இலக்குவனும் சீதை கூறிய பழமொழியால் அஞ்சி இராமனைத் தேடிச்சென்றதால் அல்லல்களே ஏற்பட்டன. எனவே, மகளிர்மாட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது உணர்த்தப்பட்டது. ''தூமகேது புவிக்கு எனத் தோன்றிய, வாம மேகலை மங்கையரால் வரும், காமம் இல்லை எனின், கடுங்கேடு எனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே'' (1427) என்பது வசிட்டர் கூறிய அறிவுரை. மாந்தர் என்பது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே ஆடவரைக் குறித்தது, 'பெண்ணிற் பெருந்தக்க யா உள' (குறள் 54) என அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் பெண்வழிச் சேறல் (அதி. 91) என ஓர் அதிகாரமே வகுத்து எச்சரித்துள்ளார். தாரையைப் படைத்த கம்பரே இங்கும் பேசுகிறார் என்பது எண்ணுதற்குரியது. 13 |