4136. '' தேவி வேறு அரக்கன் வைத்த
      சேமத்துள் இருப்ப, தான் தன்
ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு
      அரிய இன்பம்
மேவினான், இராமன்'' என்றால், ஐயா!
      இவ் வெய்ய மாற்றம்,
மூவகை உலகம் முற்றும்
      காலத்தும், முற்ற வற்றோ?

     தேவி - என் தேவியான சீதை; வேறு - தனியாய்; அரக்கன் வைத்த
சேமத்துள் இருப்ப -
இராவணன் கொண்டுபோய் வைத்த காவலில் இருக்க;
தான் தன் -
தான், தன்னுடைய; ஆவிபோல் துணைவரோடும் - உயிர்
போன்ற நண்பர்களோடு; அளவிடற்கு அரிய இன்பம் - அளவிடமுடியாத
அரிய இன்பத்தை; இராமன் மேவினான்- இராமன் விரும்பினான்; என்றால்-
என்று மக்கள் கூற நேர்ந்தால்; ஐய - ஐயனே!இவ்வெய்ய மாற்றம் -
இந்தக் கொடிய சொல்; மூவகை உலகம் - (மேல், கீழ், நடு எனும்) மூன்று
வகைப்பட்ட உலகங்களும்; முற்றும் காலத்தும்- அழியுங் காலத்திலும்;
முற்றவற்றோ -
முடிய வல்லதாகுமோ? (அந்தப் பெரும்பழி உலகங்கள்
அழிந்தாலும் அழியாது).

     உலகம் முற்றும் காலம் - ஊழிக்கால முடிவு.  அரக்கனது சிறைக்
காவலில் இருக்க.  இராமன் தன் நண்பர்களோடு இன்பங்களை விழைந்தான்
என்று உலகம் கூறும் பழிச்சொற்கு இராமன் அஞ்சினான் என்க. மேவுதல் -
விரும்புதல்.                                                   22