மேகம் பரவுதல் 4149. | பை அணைப் பல் தலைப் பாந்தள் ஏந்திய மொய் நிலத் தகளியில், முழங்கு நீர் நெயின், வெய்யவன் விளக்கமா, மேருப் பொன் திரி, மை எடுத்து ஒத்தது - மழைத்த வானமே. |
மழைத்த வானமே - கார்கால மேகத்தால் மூடுண்ட வானம்; பை அணைப் பல் தலைப் பாந்தள் - படம் பொருந்திய பல தலைகளை உடைய ஆதிசேடன் என்னும் பாம்பு; ஏந்திய - தாங்குகின்ற; மொய்நிலத் தகளியில் - செறிந்த பூமியாகிய அகலில்; முழங்கு நீர் நெயின் - ஒலிக்கின்ற கடல் நீராகிய நெய்யில்; மேரு பொன் திரி - மேருமலையாகிய அழகிய திரியில்; வெய்யவன் விளக்கமா - கதிரவனை விளக்காகக் கொண்டு; மை எடுத்(த)து ஒத்தது - (மகளிர்) மை எடுத்தற்கு இடனாகும் கலசத்தின் அடிப்பகுதியை ஒத்து விளங்கியது. வானத்தில் கரிய மேகம் பரவியிருந்த காட்சி பூமியாகிய அகலில், கடல் நீராகிய நெய்யில், மேருமலையாகிய திரியில், சூரியனான விளக்கில் வானமாகிய கலயத்தில் மை கூட்டினாற் போல் விளங்கியது என்பதாம். அகலும், நெய்யும், திரியும், விளக்குமாக நிலத்தையும், கடல் நீரையும், மேரு மலையினையும், சூரியனையும் இயைபு உருவமாகக் கூறி 'வானம் மை எடுத்து ஒத்தது' என உவமை அணிபடக் கூறியுள்ளார். வானம் இயல்பாகக் கரிய நிறம் கொண்டிருந்ததைக் கலயத்தில் மை கூட்டினாற் போல என்பதால் தற்குறிப்பேற்ற, உவமை அணிகளாம். 'வையம் தகளியா, வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக' (முதல் திருவந்தாதி - 1) என்ற பொய்கையாழ்வார் பாசுரத்தை இப்பாடல் அடியொற்றியுள்ளது. கடல்நீர் கதிரவன் வெயிலால் ஆவியாகச் சென்று மேகமாகிறது என்ற அறிவியல் கொள்கைக்கு ஏற்ப இவ்வருணனை அமைந்திருத்தலைக் காணலாம். ஆதிசேடன் ஆயிரந்தலைகளை உடையவனாதலின் 'பல் தலைப் பாந்தள்' என்றும், அவன் நிலவுலகத்தைத் தாங்குவதாகக் கூறப்படும் புராண மரபு பற்றிப் 'பாந்தள் ஏந்திய மொய்நிலம்' என்றும் கூறப்பட்டுள்ளன. மேருமலையைச் சூரியன் வலம் வருவதாகக் கூறும் மரபு பற்றி மேருவாகிய திரியில் பற்றி வலம் சுழல்கின்ற விளக்காகச் சூரியனை உருவகஞ் செய்தார். 'பாந்தள் ஏந்திய' எனக்கூறியதால், நிலத்தைத் தாங்கும் ஆதிசேடனை விளக்கின் தண்டாகக் கொள்ளலாம். வானத்தை மை படி வைக்கும் கலயத்தின் அடிப்பகுதியாகவும், மேகத்தை மையாகவும் கொள்க. 'வேனிலான் புகழைத் தீட்டும் தாரகை எழுந்தொளி சிறந்திட, அணிவான் கூட்டு மையெனச் சிறந்தது கூரிருட்பிழம்பே' (நைடத: மாலை: 11); என்ற அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. நெயின் - தொகுத்தல் விகாரம், மழைத்த - மழை என்னும் பகுதி அடியாகப் பிறந்த பெயரெச்சம். அகலில் எண்ணெய் ஊற்றி, தீயிட்டு எரித்து, அதனால் கரித்திரளைக் கலயத்தின் அடிப்பாகத்தில் படியச் செய்து மை கூட்டும் வழக்கம் இப்பாடலில் குறிக்கப்பட்டது. 2 |