4150. | நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என விண்ணகம் இருண்டது; வெயிலின் வெங் கதிர் தண்ணிய மெலிந்தன; தழைத்த, மேகமே. |
நண்ணுதல் அருங்கடல் - நெருங்குதற்கு அரிய கடலில் தோன்றிய; நஞ்சம் நுங்கிய - நஞ்சை விழுங்கிய; கண்ணுதல் கண்டத்தின் - நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் கழுத்தின்; காட்சி ஆம் என - கரிய நிறக் காட்சி என்னுமாறு; விண்ணகம் இருண்டது - வானம் இருண்டது. வெயிலின் வெங்கதிர் - சூரியனுடைய வெம்மையான கதிர்கள்; தண்ணிய மெலிந்தன - குளிர்ந்தனவாய்த் தம் வலிமை குறைந்தன; மேகம் தழைத்த - கரிய மேகங்கள் நீர் மொண்டு பெருகிப் பரவின. பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சின் கொடுமை தோன்ற 'நண்ணுதல் அருங்கடல் நஞ்சம்' என்றார். கண்ணுதல் - இலக்கணப்போலி, நெற்றிக் கண்ணை உடைய சிவபிரானைக் குறித்தலின் அன்மொழித் தொகையுமாம். அமுதம் வேண்டி அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைய, முதலில் வந்த நஞ்சைச் சிவபிரான் உண்டார் என்பது புராணக் கதையாகும். நஞ்சு கரிய நிறமுடையதாதலின் அதனை உண்ட சிவபிரான் கண்டமும் கரிய நிறமுடையதாயிற்று. 'நீலமணி மிடற்றன்' (புறம் - 91) என்பர் ஒளவையார். மெலிந்தன, தழைத்த - முரண் தொடை. சிவபிரான் கண்டத்தின் கருநிறம் போல் வானம் இருண்டது என்றது காட்சிஅணி. 3 |