4152. நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே.

     நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்-
குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)

குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.

     கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி.  நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க.  உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப.                        5