4153. | நீல் நிறப் பெருங் கரி நிரைத்த நீர்த்து என, சூல் நிற முகிற் குலம், துவன்றி, சூழ் திரை மால் நிற நெடுங் கடல் வாரி, மூரி வான் மேல் நிரைத்துளது என, முழக்கம் மிக்கதே. |
நீல் நிறப் பெருங்கரி - நீல நிறம் வாய்ந்த பெரிய யானைகளை; நிரைத்த நீர்த்து என - (வானத்தில்) வரிசையாக நிறுத்தி வைத்த தன்மை போல; சூல் நிற முகிற் குலம் - (நீரைப் பருகிய) கருக்கொண்ட கரு நிறமுடைய மேகக்கூட்டம்; துவன்றி - நெருங்கி நின்று; சூழ் திசை - பூமியைச் சூழ்ந்துள்ள; மால் நிற நெடுங்கடல் - கருநிறமுள்ள பெரிய கடலின்; வாரி - தண்ணீர்; மூரிவாள் மேல் - (எழுந்து) பெரிய வானத்தின் மேல்; நிரைத்துளது என - பரவி நின்றாற் போல; முழக்கம் மிக்கது - இடி முழக்கம் மிக்கதாயிற்று. கரிய பெரிய யானைகளை விண்ணில் வரிையைாக நிறுத்தி வைத்தாற் போலச் சூல் கொண்ட கருமேகங்கள் நெருங்கிக் குமுறுவது பெரிய கடல் வானத்தெழுந்து பேரொலி முழக்கியது போலிருந்தது என்பதாம். யானை, கடல் என்னும் இரண்டும் மேகத்திற்குக் கரிய வடிவம், முழக்கம் என்னும் இரண்டிற்கும் ஒப்பாகும். ''வீங்கிருள் வேறு இருந்த மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே'' (882) என்ற அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. 'அகன் குன்றின் மேல் இம்பர் வாரி எழுந்தது போன்றதே' (14) என்பதும் காண்க. நீல் - நீலம்; நீர்த்து - நீர்மை என்ற பண்புப்பெயர் ஈறு கெட்டது; து - பகுதிப் பொருள் விகுதி. 6 |