4168. | பரஞ்சுடர்ப் பண்ணவன், பண்டு, விண் தொடர் புரம் சுட விடு சரம் புரையும் மின்இனம், அரம் கடப் பொறி நிமிர் அயிலின், ஆடவர் உரம் சுட உளைந்தனர், பிரிந்துளோர் எலாம். |
பரஞ்சுடர்ப் பண்ணவன் - பரஞ்சோதியாகிய சிவபிரான்; பண்டு விண்தொடர் புரம் சுட - பண்டைக்காலத்து விண்ணில் தொடர்ந்து இயங்கிய திரிபுரங்களை எரிக்க; விடு சரம் புரையும் - தொடுத்த அம்பு போன்ற; மின் இனம் - மின்னல்கள்; அரம் சுட - அரத்தினால் அராவப்பட்டு; பொறி நிமிர் அயிலின் - ஒளி வீசுகின்ற வேர்ப் படைகள் போல; ஆடவர் உரம் சுட - (தலைவியரைப் பிரிந்த) ஆடவர்களின் நெஞ்சை எரிப்ப; பிரிந்துளோர் எலாம் - பிரிந்தவர்கள் எல்லாம்; உளைந்தனர் - வருந்தினர். சிவபிரான் புரம் எரிக்க அம்பு போன்ற மின்னல்கள் தலைவியரைப் பிரிந்த ஆடவர்களை வருத்தின. பரஞ்சுடர்ப் பண்ணவன் என்றது சிவபிரானை. விண் தொடர் புரம் - வானில் திரிந்து கொண்டு உயிர்களை அழித்து வந்த திரிபுரங்கள். உரம் - மார்பு, இடவாகு பெயராய் நெஞ்சைக் குறித்தது. 21 |