4171. | விசைகொடு மாருதம் மறித்து வீசலால், அசைவுறு சிறு துளி அப்பு மாரியின், இசைவுற எய்வன இயைவவாய், இருந் திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே. |
விசை கொடு - வேகம் கொண்டு; மாருதம் - காற்று; மறித்து வீசலால்- மாறி மாறி வீசுவதால்; அசை வுறு சிறு துளி - (தம்மிடத் திலிருந்து)அசைதல் பொருந்திய சிறிய மழைநீர்த்துளி; அப்பு மாரியின் - அம்புமழைபோல்; இசைவுற எய்வன - எதிர்த்திசையில் பொருந்துமாறு செலுத்துவனவாயும்; இயைவவாய் - எதிர்த் திசை செலுத்தியதை ஏற்பனவுமாய்; இருந் திசையொடு திசை - பெரிய திசையோடு திசை; செருச்செய்தல் ஒத்தவே - போர் செய்வதைப் போன்று விளங்கின. பல திசைகளில் அடிக்கும் காற்றின் வேகத்தால் மேகம் மழை நீர்த் துளிகளை எதிர்எதிரே செலுத்துதல், திசையொடு திசை அம்பு தொடுத்துப் போரிடுவது போல் இருந்தது. இயல்பாகக் காற்றால் அசைவுறும் மழைத் துளிகளைத் திசையொடு திசை எய்யும் அம்புமாரியாகக் கூறியது தற்குறிப் பேற்ற அணி ஆகும். மறித்து வீசல் - அடிக்கடி திசை மாறி வீசுதல், அப்பு - அம்பு வலித்தல் விகாரம், 'அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால்' (8991) என்றது காண்க. இருந்திசை பெரிய திசைகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குஎன்பன. இப்பாடலில் திசைகள் பொருவன போன்ற என வருணித்துள்ளார். 24 |