மரங்கள் பூத்தல் 4172. | விழைவுற பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து உழை உற, உயிர் உற உயிர்க்கும் மாதரின், மழை உற, மா முகம் மலர்ந்து தோன்றின, குழை உறப் பொலிந்தன - உலவைக் கொம்பு எலாம். |
விழைவுறு பொருள்தர - யாவராலும் விரும்பப்படுகின்ற பொருளை ஈட்டி வருவதற்காக; பிரிந்த வேந்தர் - தம்மை விட்டுப் பிரிந்து (வேற்று நாடுகளுக்குச்) சென்ற தலைவர்; வந்து உழை உற - (கார்காலம் வந்த அளவில்) பொருளீட்டி வந்த தம்மை அடைய; உயிர் உற உயிர்க்கும் - (அதனால், முன்பு பிரிந்த நிலையில் உயிர் நீங்கியது போன்றிருந்து உடம்பில்) உயிர்பொருந்த மூச்சு விடுகின்ற; மாதரின் - மகளிரைப் போல; உலவைக் கொம்பு எலாம் - (மழையில்லாமையால்) உலர்ந்து கிடந்த மரங்களின் கிளைகளெல்லாம்; மழை உற - மழை பெய்ய; குழை உறப் பொலிந்தன - தளிர்கள் பொருந்த விளங்கினவாய்; மாமுகம் மலர்ந்து - அழகிய முகம் மலர்ந்து; தோன்றின - காணப்பட்டன. பிரிந்த நிலையில் வாடிய மகளிர் தலைவர் வர மகிழ்தல் போல மழையின்றி உலர்ந்த மரங்கள் மழை பெய்த அளவில் தளிரொடு மலர்ந்து தோன்றின என்றார். உவமை அணி. பொருளின் இன்றியமையாமை கருதி அனைவரும் விரும்பும் தன்மைத்தாதலின் 'விழையுறு பொருள்' என்றார். தலைவர் பிரிவால் முக மலர்ச்சியின்றி உயிரற்ற உடம்பினராய் இருப்பர் என்பதைப் 'பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு' (4169) என முன்னரும் கூறியது காண்க. முகமலர்ச்சி மரங்கள் தழைத்து மலர்ந்ததற்கு உவமை ஆக்கினார். உயிர் அனைய கொழுநர் வர. . . . மெலிவு அகலும் கற்பினார் போல், புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன' (631) என்பன ஒப்பு நோக்கத்தக்கது. காலத்திற்க ஏற்ற வருணனையாக, கார்கால நிகழ்ச்சிகளையே ஒன்றற்கொன்று உவமையாக அமைத்த நயம் காண்க. 25 |