ஆசிரிய விருத்தம்

4173.பாடலம் வறுமை கூர,
      பகலவன் பசுமை கூர,
கோடல்கள் பெருமை கூர,
      குவலயம் சிறுமை கூர,
ஆடின மயில்கள்; பேசாது
      அடங்கின குயில்கள் - அன்பர்
கேடுறத் தளர்ந்தார் போன்றும்,
      திரு உறக் கிளர்ந்தார் போன்றும்.

     பாடலும் வறுமை கூர - (அக்கார்காலத்தில்) பாதிரி மரங்கள் (மலர்கள்
இன்மையால்) வெறுமை நிலையை அடைய; பகலவன் பசுமை கூர -
கதிரவன் (கருமேகங்களால் மறைப்புண்டு) குளிர்ச்சி மிக்கதாக; கோடல்கள்
பெருமை கூர -
வெண் காந்தள் செடிகள் (மலர்களைப் பெற்றிருத்தலால்)
பெருமை மிக; குவலயம் சிறுமை கூர - குவளை மலர்கள் குவிந்து வாட்டம்
மிக; மயில்கள் - ; திரு உறக் கிளர்ந்தார் போன்றும் - செல்வம்
பெற்றதனால் மகிழ்ச்சியுற்றவர் போல(வும்); ஆடின - மகிழ்ந்து ஆடின.
அன்பர் கேடுற -
தம் அன்பிற்குரியார் துன்பம் அடைய; தளர்ந்தார்
போன்றும் -
மனம் தளர்ந்தவர்களைப் போல(வும்); குயில்கள் பேசாது
அடங்கின -
குயில்கள் கூவாது ஒடுங்கின.

     பாடலம் - வடசொல்.  பாதிரிமரம். . . . கார்காலமாதலால் வேனிலில்
பூக்கும் பாதிரி மரங்கள் மலர்களின்றி வறுமை உற்றன.  'வரிநிறப் பாதிரி வாட.
. . . உருமிடி வானமிழிய' (காற் நாற்பது - 3) என்றதும் காண்க.
அக்காலத்தில் மேகங்களால் சூழப்படுவதாலும், மழையின் குளிர்ச்சியாலும்
கதிரவன் வெப்பம் குறைந்து விடுதலால் குளிர்ந்த தன்மை மிகுதியாகும்.
'கடுங்கதிர் நல்கூரக் கார் செல்வம் எய்த' (கார்நாற்பது-2) என்றது காண்க.
வெண்காந்தள் மழைக்காலத்தில் மலர்தல் இயல்பு. இது கார்த்திகைப் பூ
எனவும் வழங்கப்பெறும். அக்காலத்தில் குவளை மலர்கள் குவிந்திடும்
'கருங்குயில் கையற மாமயில் ஆலப் பெருங்கலி வானம் உரறும்' (கார் நாற்-16)
என்றவாறு கார்காலத்தில் மயில்கள் ஆடக்குயில்கள் ஒடுங்கும். அன்பர்
கேடுறக் தளர்ந்தார் போன்று குயில்கள் பேசாது அடங்கின; அன்பர் திருவுறக்
கிளர்ந்தார் போன்று மயில்கள் ஆடின' என எதிர்நிரல் நிரையாக்கிப் பொருள்
கொள்வதால் எதிர்நிரல்நிறை அணியாகும். செய்யுளில் இரு இடங்களில் வரும்
போன்றும் என்ற சொற்களில் முதலது எதிரது தழீஇய எச்சவும்மை. பின்னது
இறந்தது தழீஇய எச்சவும்மை. இப்பாடல் உவமை அணியை அங்கமாகக்
கொண்ட தன்மை நவிற்சி அணி அமைந்தது. மேலும், வறுமை, பசுமை;
பெருமை, சிறுமை; ஆட, அடங்கின; தளர்ந்தார், கிளர்ந்தார் என முரண்படத்
தொடுத்தமையின் முரண் அணி அமைந்தது என்றலும் தகும். 'அன்பர் கேடுற்த்
தளர்ந்தார் போன்றும், திரு உறக்கிளர்ந்தார் போன்றும் என்ற அடிக்குச்
சுக்கிரீவன் செல்வம் பெற அவனும் வானரங்களும் மகிழ்ந்தாற் பேல மயில்கள்
ஆடின; சீதை துன்பம் அடைய இராம இலக்குவர் வருந்தினாற்போல
குயில்கள் பேசாது அடங்கின' எனக் கதையொடு தொடர்புபடுத்தியும் விளக்கம்
கூறலாம். மேலும் அன்பர் கேடுறத் தளர்ந்தார் போன்று பாடலம் வறுமை கூர,
பகலவன் பசுமை கூர, குவலயம் சிறுமை கூர, குயில்கள் பேசாது அடிங்கின;
அன்பர் திருவுறக் கிளர்ந்தார் போன்று கோடல்கள் பெருமை கூர, மயில்கள்
ஆடின எனவும் பொருள் கொள்ளலாம்.                           26