4174. | நால் நிறச் சுரும்பும், வண்டும், நவ மணி அணியின் சார, தேன் உக மலர்ந்த சந்தச் சேயிதழ்க் காந்தட் செம் பூ, 'வேனிலை வென்றது அம்மா, கார்!' என வியந்து நோக்கி, மா நிலக் கிழத்தி கைகள் மறித்தன போன்ற மன்னோ. |
நால் நிறக் சுரும்பும் - பல நிறங்களை உடைய சுரும்புகளும்; வண்டும் - வண்டுகளும்; நவமணி அணியின் சார - நவமணிகள் இழைக்கப்பெற்றவளையல், மோதிரம் முதலிய அணிகளைப் பேல மொய்க்க; தேன்உகமலர்ந்த - தேன் ஒழுகும்படி மலர்ந்த; சந்தச் சேயிதழ் - அழகிய சிவந்தஇதழ்களையுடைய; காந்தள் செம்பூ - செங்காந்தள் மலர்கள்; மா நிலக்கிழத்தி - பெரிய நிலமாகிய பெண்; வெனிலை வென்றது அம்மா கார் என - 'வேனிற்காலத்தி வென்று விட்டது கார்காலம் என்று; வியந்து நோக்கி -(கார் கால அழகை) வியந்து பார்த்து; மறித்தன கைகள் - அசைத்தனவாகியகைகளை; போன்ற - ஒத்தன. வண்டும், கரும்பும் வெவ்வேறு இனம் ஆதலால் இரண்டாகக் கூறினார். 'சுரும்புகாள்! வண்டுகாள்! மகிழ்தேனினங்காள்' 'மது உண்டு தேக்கிடும் ஒண்மிஞிறீட்டங்காள்' (சீவக 892) என வண்டின் நால்வகை இனங்கள் சிந்தாமணியுள் சுட்டப்பட்டுள்ளன. காந்தளில் தேன் உண்ண மொய்க்கும் வண்டுகளின் தோற்றம் கையில் அணிந்துள்ள நவமணிகள் இழைக்கப்பெற்ற வளையல், மோதிரம் ஆகிய அணிகலன்களை ஒத்து விளங்கின. 'வளைகள் காந்தளின் பெய்தன அனைய கைம்மயிலே' (2074) எனக் கம்பரே உவமை கூறியிருத்தல் காண்க. காந்தள் மலரில் தும்பி மணிபோல் தோன்றுவதை 'அலங்கு குலைக் காந்தள், நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி, பாம்புமிழ் மணியின் தோன்றும்' (குறுந். 239) என்னும் அடிகள் உணர்த்தும. செங்காந்தள் கைக்கு உவமையாவதைக் 'காந்தள் நறுங்குலை அன்ன நலம் பெறு கையினள்' (ஐங்குறு-293), அலர்காந்தள் நுண்ணேர்தண் ஏருருவின் துடுப்பெனப் புரையுநின் திரண்ட நேர் அரி முன்கை (கலி-59) என்னும் இடங்களில் காண்க. வண்டினிம் மொய்த்தலால் காந்தள் மலர் அசையும் தோற்றம், 'வேனிலை வென்றதம்மம கார்' என நிலமகள் வியந்து கையசைத்தது போல் இருந்தது என்பது தற்குறிப்பேற்ற அணியாகும். கையசைத்தல் வியப்பிற்கு அறிகுறி. மழையானது, முதுவேனிற் காலத்தில் உள்ள வெப்பம், வியர்வு, அசதி முதலியவற்றை ஒழித்தமையால் வேனிலைக் கார் வென்றது என்றார். பொதுவாக வேனிற்காலம் பருவங்களுள் சிறந்தது எனப் போற்றப்படுவதால் அதனை வென்ற செயல் 'அம்மா' என்று வியக்கும்படி ஆயிற்று. 'மறித்தன' என்பதற்குத் தடுத்தல் எனக் கொண்டு, வேனிற்காலத்தை இனி வேண்டா எனக் கைகளால் தடுத்தது போலிருந்தன என்றும் பொருள் கொள்வர். மன் ஓ ஈற்றசைகள், அம்மா - வியப்பிடைச் சொல் 27 |