இந்திரகோபப் பூச்சிகள்

4176. எள் இட இடமும் இன்றி
      எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர்தம்மைப்
      பிரிந்தவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம்
      கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
      சிதர்ந்தென, விரிந்த மாதோ.

     எள் இட இடமும் இன்றி - ஓர் எள்ளைப் போடுதற்கும் இடம்
இல்லாதபடி; எழுந்தன இலங்கு கோபம் - (மிக்கு) எழுந்தனவவகிய
இந்திரகோபம் என்னும் பூச்சிகள்; தள்ளுற - (பிரிவாற்றமையால்)
தடுமாறும்படி; தம்மைப் பிரிந்தவர் தலைவர் - தம்மைப் பிரிந்தவர்களாகிய
தலைவர்கள்; தழீ இய - (கார் காலத்தில் மீண்டு வந்து) தழுவ; தூமக்
கள்ளுடை ஓதியார்தம்
- வாசனைப்புகையூட்டப் பெற்றதும் (சூடிய
மலர்களின்) தேனையுடையதுமான கூந்தலையுடைய மகளிரொடு கொண்ட;
கலவியில் - புணர்ச்சியின் முன்னர்; பல்கால் கான்ற - பல முறை உமிழ்ந்த;
வெள்ளடைத் தம்பல் குப்பை - வெற்றிலைத் தம்பலங்களின் தொகுதிகள்;
சிதர்ந்தென விரிந்த - சிந்திக் கிடந்தாற் போலப் பரந்து கிடந்தன.

     எள் இட இடமும் என்றதால் தம்பலப் பூச்சிகளின் மிகுதி கூறப்பட்டது.
கோபம் - இந்திர கோபம். இது செந்நிறமாதலின் தம்பலத்துக்கு உவமித்தார்.
தம்பல் - தம்பலம் என்பதன் கடைக்குறை. தூமம் அகில் முதலியவற்றின்
புகை. இது கூந்தலுக்கு ஊட்டப் பெறுவது. ''பல்லிருங் கூந்தல் சின்மலர்
பெய்ம்மார் தண்ணறுந் தகரமுளரி நெருப்பமைத்து, இருங்காழ் அகிலொடு
வெள்ளயிர் புகைப்ப'' (நெடுநல்-54-55) என்பது காண்க. பிரிவின்கண் அணி
செய்யப்பெறாதிருந்த கூந்தல் தலைவர் வருகையால் பூவும் புகையும் பெற்றுப்
பொலி வெய்தினமை தோன்றத் ''தூமக் கள்ளுடை ஓதியார்'' என்றார்
அன்புமிகுதியால் தழுவுந்தொறும் தம்பலம் மென்று உமிழ்ந்தமை தோன்றப்
பல்கால் கான்ற என்றார். 'எள்ளிட இடமும் இன்றி' என்ற இடத்து இழிவு
சிறப்பும்மை பிரித்துக் கூட்டப்பட்டது. மாது ஓ- ஈற்றசை. உவமை அணி
அமைந்தபாடல்.                                             29