மலைஅருவி

4177. தீம் கனி நாவல் ஓங்கும்
      சேண் உயர் குன்றின், செம் பொன்
வாங்கின கொண்டு, பாரில்
      மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றை
      விரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்று
     தலைமயக்குறுவ தம்மில்.

     தீம்கனி நாவல் ஓங்கும் - இனிய பழங்களையுடைய நாவல் மரம்
வளர்ந்து ஓங்கியிருக்கும்; சேண் உயர் குன்றின் - வானளாவ உயர்ந்திருந்த
மேருமலையினின்று; வாங்கின செம்பொன் கொண்டு - இழுத்துக் கொண்டு
வந்த சிவந்த பொன்னைச் சுமந்து கொண்டு; பாரில் மண்டும் - பூமியின்கண்
பெருகிச் செல்கின்ற; மால்யாறு மான - பெரிய சம்பூ என்னும் ஆற்றைப்
போல; வேங்கையின் மலரும் - (அம்மலையிலிருந்து) வேங்கை மரத்தின்
மலர்களையும்; கொன்றை விரிந்தென வீயும் - கொன்றை மரங்களில்
மலர்ந்தவனாகிய மலர்களையும்; ஈர்த்துத் தாங்கின - இழுத்துக் கொண்டு
சுமந்து வந்தனவாகிய; கலுழி - அருவி நீர்ப் பெருக்குகள்; சென்று - பரவி;
தம்மில் தலை மயக்குறுவ - தமக்குள் ஒன்றோடொன்று கலப்பனவாயின.

     மலையருவிகள் பொன்னிற வேங்கை மலரையும், கொன்றை மலரையும்
அடித்துக்கொண்டு வருதல் மேருமலையிலுள்ள பொன்னையும், நாவற் பழச்
சாற்றால் விளைந்த பொன்னையும் அடித்துக் கொண்டு வரும் சம்பூ எனும்
ஆறு போன்று உள்ளது என்பதாம். ''மேருமலையின் தெற்கிலுள்ள
கந்தமாதனம் என்னும் மலையிலுள்ள நாவற் பழங்களின் சாறு சம்பூ நதியாகப்
பெருகுகின்றது. பழச்சாற்றோடு கலந்த மண் காற்றில் உலர்ந்து சாம்பூநதம்
என்ற சித்தர்களின் அணியும் செம்பொன் ஆகிறது. நாவல் மரத்தை ஒட்டியே
சம்புத் தீவு (நாவலந்தீவு) என்னும் பெயர் உண்டாயிற்று என்று புராணம்
கூறும். ''பட்டமார்தரு மாகரியளவெனப் பருத்துக், கொட்டை நுண்ணிய
நாவலின் கொழுங்கனிச் சாறு, பெட்ட சம்பு மாநதியென வலங்கொடு பெருகி,
உட்டெளிந்து பொன் மேருவைச் சுலாயினிதோடும்'' ''அதிருமப்புனல்
அருந்தினர் அருங்கரை யசும்பு, ததையும் வெங்கதிர் காற்றுற உலர்ந்து
நற்சாம்பு நதம் எனும் பொனாம் ஆங்கதின் அணி புனை நலத்தோர்,
இதமில்வெம்பிணி நரை திரையற்று இனிதிருப்பார்'' என்ற பாகவதமும்
(செவ்வை. பாகவதம் 1219-20) காணத்தக்கது. உவமை அணி. நாவற்
பழச்சாற்றின் விளைந்த பொன்னொடு, மேருமலையிலிருந்து பெருகுதலால்
அம்மலைப் பொன்னையும் ஈர்த்து வரும் சம்பு நதியைக் கொன்றையினையும்
வேங்கை மலரையும் அடித்துவரும் அருவிக்கு உவமை கூறினார். கலுழி -
கலங்கல் நீர்; கலங்கிய நீரையுடைய அருவி நீர்ப் பெருக்கு.         30